உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம் ஆரம்பமானது சோதனை ஓட்டம்

 மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம் ஆரம்பமானது சோதனை ஓட்டம்

பெங்களூரு: பெங்களூரு, 'நம்ம மெட்ரோ'வின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் 'இளஞ்சிவப்பு' வழித்தடத்தில், தற்போது முக்கியமான சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காளேன அக்ரஹாரா முதல் தாவரகெரே வரையிலான 7.5 கி.மீ., உயர்மட்டப் பாதையில் அதிகாரப்பூர்வ சோதனை ஓட்டங்கள் நேற்று முன்தினம் துவங்கின. இதற்காக ரயில்வே அமைச்சகத்தின் ஆர்.டி.எஸ்.ஓ., எனப்படும் ஆய்வு வடிவமைப்புக் குழுவினர் பெங்களூரு வந்துள்ளனர். இவர்கள் ரயிலின் வேகம், பிரேக் சிஸ்டம், தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து இரண்டு வாரங்களாக விரிவான சோதனைகளை நடத்துவர். இதற்கு முன்னதாக இந்த வழித்தடம் மே மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகள் கிடைக்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்பதால், ஜூலையில் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைரி சர்க்கிள் முதல் நாகவாரா வரையிலான சுரங்கப் பாதை வழித்தடத்தில் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. காளேன அக்ரஹாரா முதல் நாகவாரா வரையிலான முழு 'இளஞ்சிவப்பு' வழித்தடமும் இந்த ஆண்டு இறுதி அல்லது 2027 துவக்கத்தில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என, மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழித்தடத்திற்காக பெமல் நிறுவனம் தயாரித்த தலா ஆறு பெட்டிகள் கொண்ட ஐந்து ரயில்கள் ஏற்கனவே தயாராக உள்ளன. பன்னரகட்டா சாலை, ஜெயதேவா மருத்துவமனை, எம்.ஜி. ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களை இணைப்பதால், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

10வது ரயில் வருகை

ஆர்.வி., சாலை - பொம்மசந்திரா இடையிலான உயர்மட்ட 'மஞ்சள்' வழித்தடத்தில் தற்போது ஒன்பது ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணியர் 10 நிமிடங்கள் வரை அடுத்த ரயிலுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்குவதற்காக 10வது ரயில் ஹெப்பகோடி பணிமனைக்கு வந்துள்ளது. இந்த ரயில் அடுத்த மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது, பயணியர் காத்திருக்கும் நேரம் 7 நிமிடங்களாகக் குறையும் என்று கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை