பெங்களூரு: கர்நாடக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசு நிதியுதவி வழங்காததால், பள்ளி சிறார்கள் பசியோடு பாடம் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்கிலும், 2002ம் ஆண்டு தொடக்க பள்ளி சிறார்களுக்கு, இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை, கர்நாடக அரசு துவக்கியது. அதன்பின் கட்டம், கட்டமாக உயர் நிலைப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு மதிய உணவு, பால், முட்டை, முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் அரசும், நான்கு நாட்கள் அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் சார்பிலும், முட்டை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்குவதில் மத்திய அரசின் பங்களிப்பு உள்ளது. நிதியுதவி வழங்குகிறது. அரசு பள்ளிகளில் துவங்க ப்பட்டுள்ள எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மற்றும் ஒன்பதாவது, பத்தாவது வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு, முட்டை, வாழைப்பழம் வழங்கும் செலவை, மாநில அரசு வழங்க வேண்டும். ஆனால், நடப்பாண்டு பிப்ர வரியில் இருந்து, மாநில அரசின் நிதியுதவி வரவில்லை. கடந்தாண்டு மிச்சமிருந்த நிதி மற்றும் மத்திய அரசிடம் இருந்து கிடைத்த நிதியை வைத்து, பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த தொகை காலியாகி வருகிறது. 'இன்னும் சில நாட்களில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே, மதிய உணவு கிடைக்கும். 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கிடைக்காது' என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு, இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் பள்ளிகளில் உணவு தயாரிப்பதை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கின்றனர்.