கிராபர்டு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
ஹாசன்; கர்நாடகாவின் மிகவும் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றான, சக்லேஷ்புராவின் கிராபர்டு மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் காதர் நேரில் ஆய்வு செய்தார். ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவில் கிராபர்டு மருத்துவமனை உள்ளது. அரசு சார்ந்த இந்த மருத்துவமனை, நுாற்றாண்டுகள் பழமையானது. தாலுகா அளவிலான மருத்துவமனைகளில், முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல், நோயாளிகள் பரிதவிக்கின்றனர். குறிப்பாக மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகளால் அவதிப்படும் பெண்களுக்கு, சரியான சிகிச்சை கிடைப்பது இல்லை. மருத்துவ அதிகாரிகள், நர்ஸ்கள் பற்றாக்குறை உள்ளது. ஸ்கேனிங் இயந்திரங்கள் இல்லை. இப்பகுதியில் சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், இங்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இத்தகைய முக்கியமான மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து, பெண்கள் பலர் அரசுக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை. மருத்துவமனையில், 120 படுக்கைகள் உள்ளன. மேலும், 30 முதல் 40 படுக்கை தேவைப்படுகிறது. மருத்துவமனையின் சூழ்நிலையை தெரிந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் காதர், நேற்று முன் தினம் நள்ளிரவு 11:00 மணிக்கு, கிராபர்டு மருத்துவமனைக்கு, திடீர் வருகை தந்து, பார்வையிட்டார். நேற்று அதிகாலை 3:00 மணி வரை, ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் காதர் பேசியதாவது: அரசு மருத்துவமனை என்றால், அது குடும்ப மருத்துவமனை என, கருத வேண்டும். எந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தாலும், அவர்களை குடும்ப உறுப்பினர் போல பார்த்துக்கொள்ள வேண்டும். மனித நேயத்துடன் சிகிச்சையளிக்க வேண்டும். மருத்துவமனையின் பிரச்னைகள் குறித்து, தெரிந்து கொள்ள மாநிலம் முழுதும் உதவி எண் அறிமுகம் செய்யப்படும். கிராபர்டு மருத்துவமனை, நுாற்றாண்டை கடந்துள்ளது. சில அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது. படிப்படியாக இதை சரி செய்கிறேன். இந்த மருத்துவமனையில் மாதந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடந்தால், தாய் மற்றும் சேய் மருத்துவமனையாக்க, அரசு ஆலோசிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.