மேற்கு தொடர்ச்சி மலையில் திட்டப்பணி நிபந்தனையை பின்பற்ற அமைச்சர் உத்தரவு
பெங்களூரு: ''மேற்கு தொடர்ச்சி மலைகளில் செயல்படுத்தப்படும் சாலை உள்ளிட்ட திட்டங்களில் நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டார். பெங்களூரில் வன விலங்கு வாரிய நிலைக்குழுவின் நான்காவது கூட்டம், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: ஷிரூர் உட்பட பல இடங்களில், மலைகளில் மண் சரிந்து விழுந்துள்ளது. மலைகளை 90 டிகிரி கோணத்துக்கு பதிலாக, 45 டிகிரி கோணத்தில் வெட்டினால், சரிவை தடுக்க முடியும். வனம் மற்றும் வன விலங்கு சரணாலயங்களில் எந்தவொரு திட்டத்துக்கும் அனுமதி வழங்கும்போது, வன விலங்கு களுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் கொள்ளேகாலில் உள்ள ஹனுார் சட்டசபை தொகுதியில், 291 பேர் வசிக்கும் பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் குறித்து வாரியம் விவாதித்துள்ளது. தேசிய வனவிலங்கு கவுன்சிலின் நிலைக்குழு ஒப்புதலுக்காக, 11 ஏக்கர் வனப்பகுதியை விடுவிக்கும் திட்டத்தை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்திவேரி பறவைகள் சரணாலயம், ஷராவதி சிங்காலிகா வனவிலங்கு சரணாலயம், சோமேஸ்வர் வன விலங்கு சரணாலயம் ஆகியவற்றில் இணைப்பு கம்பங்களை நிறுவும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். சுற்றுச்சூழல், விலங்குகள், பறவைகளுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விபரங்களை, அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சித்தாபூரில் சிறுத்தை பாதுகாப்பு சரணாலயம் அமைப்பது தொடர்பாக, அந்த இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைகளில் செயல்படுத்தப்படும் சாலை மற்றும் பிற திட்டங்களில் நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வன விலங்கு வாரியத்தின் நிலைக்குழுவின் நான்காவது கூட்டம், அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தலைமையில் நடந்தது.