உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா அமைச்சர் ஜமீர் அகமது கான் சவால்

குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா அமைச்சர் ஜமீர் அகமது கான் சவால்

பெங்களூரு : “ஏழைகளிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு, வீடுகளை ஒதுக்கினேன் என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,” என, ஜமீர் அகமது கான் சவால் விடுத்துள்ளார்.கர்நாடக அரசின் வீட்டுவசதி துறையின் கீழ் செயல்படும் ராஜிவ் காந்தி வீட்டுவசதி கழகத்தில் இருந்து, பயனாளிகளுக்கு வீடு ஒதுக்குவதில் லஞ்சம் வாங்கப்படுவதாக, ஆலந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோ வெளியானது.'ஆடியோவில் இருப்பது என் குரல் தான்' என, அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு எதிராக பேளூர் கோபால கிருஷ்ணா உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.,க்களும் குரல் கொடுத்தனர். இதையடுத்து, பதவியை ஜமீர் அகமது கான் ராஜினாமா செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.* 2,000 வீடுகள்இந்நிலையில், பெங்களூரில் ஜமீர் அகமது கான் நேற்று அளித்த பேட்டி:தங்கள் தொகுதிக்கு இத்தனை வீடுகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும் கடிதத்தின் அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. பி.ஆர்.பாட்டீல் 2,000 வீடுகள் ஒதுக்கும்படி எனக்கு கடிதம் எழுதினார். முதல்கட்டமாக 950 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க லஞ்சம் வாங்கப்படுவதாக அவர் கூறி உள்ளார்.அமைச்சர் ஜமீர் அகமது கான் லஞ்சம் வாங்கினார் என, என் பெயரை அவர் கூறவில்லை. யார் லஞ்சம் வாங்கினர் என்ற தகவல் அவரிடம் இருக்கும். அதை அவர் கூற வேண்டும். நான் ஒரு ரூபாய் கூட யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை. ஏழைகளிடம் இருந்து பணம் வாங்குவது நல்லதா? பணத்தை பெற்று வீடு கொடுத்தால், ஏழைகளின் சாபத்திற்கு ஆளாக மாட்டோமோ? என் பிள்ளைகள் நன்றாக இருப்பரா? லஞ்சம் வாங்கியவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.* கேவலம்நான் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆன பின், சென்னப்பட்டணாவுக்கு 5,000; ராம்நகருக்கு 3,000 வீடுகள் ஒதுக்கி உள்ளேன். வீட்டு வசதி துறையில் ஊழல் நடந்தால் சி.பி.ஐ., விசாரிக்கட்டும், உண்மை வெளிவரட்டும். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.ஏழைகள் மீது பா.ஜ., - ம.ஜ.த.,வுக்கு அக்கறை இல்லை. பணம் வாங்கிக் கொண்டு ஏழைகளுக்கு வீடு வழங்கியதாக, என் மீது எழுந்து உள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் என் பதவியை ராஜினாமா செய்வேன்.கடந்த 2007ல் குமாரசாமி முதல்வராக இருந்தபோது, நான் முதன்முறை அமைச்சர். என் தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு, குமாரசாமி வேண்டும் என்றே வரவில்லை. இதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவன் நான். பதவி எனக்கு முக்கியம் இல்லை. ஏழைகள் பணத்தை பறிப்பவர்கள் வீட்டின் குழந்தைகள் புழு கடித்து இறந்துவிடுவர். நான் சத்ய ஹரிசந்திரன் என்று கூறவில்லை. அதற்காக ஏழைகளிடம் பணம் வாங்கும் கேவலமான நிலைக்கு நான் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.ராஜினாமா வேண்டாம்!அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கும், எனக்கும் நெருங்கிய பழக்கம் கிடையாது. ஆனால், அவரை நான் பார்த்த வரையில் ரொம்ப நல்ல மனிதர். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று மனதில் இருந்து உண்மையாக நினைப்பவர். அவரை மாதிரி நல்ல உள்ளம் கொண்ட அமைச்சரை பார்ப்பது அரிது. யார், யாரோ கேட்கின்றனர் என்பதற்காக அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம். ஜமீர் அகமது கான் பெரிய பணக்காரர். ஏழைகளிடம் இருந்து பணம் வாங்கும் அவசியம் அவருக்கு இல்லை.பசவராஜ் ராயரெட்டி,காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,ஜமீரிடம் பேசுவேன்!ஜமீர் அகமது கான் கேபினட் அமைச்சர். அவர் அழைத்தால் அவரை சந்தித்து பேசுவேன். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை சந்திக்க உள்ளேன். ஊடகங்கள் முன் என்ன கூறினேனோ, அதை அவர்களிடம் கூறுவேன். குற்றச்சாட்டு கூறிவிட்டு ஓடி போகும் பழக்கம் எனக்கு இல்லை.பி.ஆர்.பாட்டீல்,காங்கிரஸ் எம்.எல்.ஏ.,

கன்னட அமைப்பினர் கைது

பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள மினிஸ்டர் இல்ல குடியிருப்பில், அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு ஒதுக்கப்பட்ட வீடு உள்ளது. இந்த வீட்டின் முன் கன்னட அமைப்பினர் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கைது செய்தனர்.கன்னட அமைப்பின் ரூபேஷ் ராஜண்ணா மீது, ஜமீர் அகமது கான் உதவியாளர் சர்ப்ராஸ் கான் மிரட்டல் குற்றச்சாட்டு கூறினார். அவரை கண்டித்தே போராட்டம் நடந்தது என, தெரிய வந்துள்ளது.

லோக் ஆயுக்தாவில் புகார்

எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல் மற்றும் ஜமீர் அகமது கான் உதவியாளர் சர்ப்ராஸ் கான் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோவுடன், லோக் ஆயுக்தாவில் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் நேற்று புகார் அளித்தார். 'இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை