பாகிஸ்தான் ஆதரவு கோஷம் இல்லை அறிக்கைக்கு முன் அமைச்சர் கண்டுபிடிப்பு
தாவணகெரே: ''பாகிஸ்தான் ஆதரவு கோஷம் போடவில்லை. தடயவியல் அறிக்கையில் கோஷம் போட்டதாக அறிக்கை வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி: பத்ராவதியில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்தது. அது குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை. எப்.எஸ்.எல்., எனும் தடயவியல் அறிக்கை வரட்டும். அறிக்கை கிடைத்த பின்னரே தெரிய வரும். எனக்கு கிடைத்த தகவல்படி, அவ்வாறு யாரும் கோஷம் போடவில்லை என்று தெரிய வந்துள்ளது. அறிக்கையில் கோஷம் எழுப்பியதாக தகவல் வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.,வினர் கூறும் அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மத்துார் சம்பவம் குறித்து பேசுபவர்கள், மணிப்பூரில் நடந்த சம்பவம் குறித்து ஒரு பா.ஜ., அமைச்சர் கூட பேசவில்லை. சட்டசபைக்குள் வாக்குறுதி திட்டங்களை வரவேற்கும் அவர்கள், வெளியே எதிர்க்கின்றனர். 'உங்கள் மகளை காப்பாற்றுங்கள், மகளுக்கு கல்வி கொடுங்கள்' என்று கூறுகின்றனர். குழந்தைகளை பராமரிப்பவர்கள் நாங்கள். ஆனால் போஸ்டர் அவர்களுடையது. குப்பையும், துடைப்பமும் எங்களுடையது; ஆனால் 'துாய்மை இந்தியா' புகைப்படம் அவர்களுடையது. இவ்வாறு அவர் கூறினார்.