தற்கொலை செய்த பா.ஜ., தொண்டரின் மொபைல் போன் ஆய்வு
பெங்களூரு : தற்கொலை செய்து கொண்ட பா.ஜ., தொண்டர் வினய் சோமய்யாவின் மொபைல் போன் மற்றும் லேப்டாப் ஆகியவை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.குடகு, சோமவார்பேட் கோனிமரூர் கிராமத்தின் வினய் சோமய்யா, 35; பா.ஜ., தொண்டர். பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த 4ம் தேதி அதிகாலை தனது அலுவலகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட கடிதத்தின் அடிப்படையில், குடகு மாவட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தென்னிரா மஹினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.குடகு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா மீது வழக்குப்பதிவு செய்ய கோரி, பா.ஜ.,வினர் நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் தென்னிரா மஹினாவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப, ஹென்னுார் போலீசார் தயாராகி வருகின்றனர்.வினய் சோமய்யாவின் மொபைல் போன், லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருக்கும் தகவல் பற்றி அறிய, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர். வினய் கடைசியாக மொபைல் போனில் யாரிடம் பேசினார்; தற்கொலை செய்யும் போது அலுவலகத்தில் வேறு யாராவது இருந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.சமூக வலை தளத்தில் அவர் வெளியிட்ட கடிதத்தின் உண்மை தன்மையும் சரிபார்க்கப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.