போலீசார் சோதனை நடத்தியபோது சிறையில் சிக்காத மொபைல் போன்கள்
பரப்பன அக்ரஹாரா: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா, பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற உமேஷ் ரெட்டி, தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ரன்யா ராவ் காதலன் தருண் உள்ளிட்ட கைதிகள், மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் பயங்கரவாதி கையில் மொபைல் போனா என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததால், அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. சிறை துறை கூடுதல் டி.ஜி.பி., தயானந்தாவிடம், நேற்று முன்தினம் மொபைல் போனில் பேசிய முதல்வர் சித்தராமையா, சிறைக்குள் என்ன நடக்கிறது என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். 'நான் விடுமுறையில் இருக்கிறேன். சிறை அதிகாரிகளிடம் கேட்டு விளக்கம் அளிக்கிறேன்' என்று தயானந்தா கூறி உள்ளார். சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தியது குறித்து, அறிக்கை அளிக்கும்படி, சிறை அதிகாரி ஆனந்த் ரெட்டிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையில், நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் அறையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கருப்பு ஆடு சோதனையின் போது, ஒரு மொபைல் போன் கூட சிக்கவில்லை. போலீசார் சோதனை நடத்த இருப்பது பற்றி, கைதிகளுக்கு, முன்கூட்டியே தகவல் கிடைத்திருப்பது உறுதியாகி உள்ளது. சிறைக்குள் இருக்கும் கருப்பு ஆடு யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சிறை அதிகாரி ஆனந்த் ரெட்டி, கூடுதல் டி.ஜி.பி., தயானந்தாவுக்கு நேற்று அளித்த அறிக்கையில், 'கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது பழைய வீடியோ. 2023ல் எடுக்கப்பட்டது' என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இதுவும் பொய். கைதிகள் மொபைல் பயன் படுத்திய வீடியோவில், கடந்த 6ம் தேதிக்கான ஆங்கில நாளிதழில், இம்மாதத்திற்கான காலண்டர் இருந்தது. ரன்யாவின் காதலன் தருண், இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் கைதாகி இருந்தார். இதன்மூலம் தயானந்தாவுக்கு பொய் அறிக்கை அளித்து, இப்பிரச்னையை முடித்து வைக்க முயன்றதும் தெரிந்து உள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று அளித்த பேட்டி: பரப்பன அக்ரஹாரா சிறைக்குள், கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தியது பற்றி அறிக்கை கேட்டு உள்ளேன். இந்த அறிக்கை எனக்கு சமாதானம் அளிக்கவில்லை என்றால், வேறு குழுவை அமைப்பேன். சிறைகளில் கைதிகளுக்கு சொகுசு வாழ்க்கை கிடைப்பது, திரும்ப, திரும்ப நடக்கிறது. ஆலோசனை இதற்கு முன்பு தவறு செய்தவர்களை சஸ்பெண்ட் செய்து உள்ளோம். சிறையில் ஊழியர் பற்றாக்குறை என்று, அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி என்றால் பணியில் இருப்போர் என்ன செய்கின்றனர். கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைப்பதை தடுப்பது தொடர்பாக, நாளை (இன்று) போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினர். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில், சிறையில் இருக்கும் பயங்கரவாதி நசீருக்கு, மொபைல் போன் கொடுத்ததாக, சிறை மனநல மருத்துவர் நாகராஜ், உதவி எஸ்.ஐ., சந்த் பாஷா, சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருந்தனர். மற்ற கைதிகளுக்கும், பணத்திற்காக நாகராஜ் மொபைல் போன் விற்பனை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.