10க்கும் மேற்பட்ட பைக்குகள் எரிப்பு
ஹலசூர்: சாலையோரத்தில் நின்றிருந்த பைக்குகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்துள்ளது. தீ கடைகளுக்கும் பரவியதில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. பெங்களூரில் சாலை ஓரங்கள், வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. நள்ளிரவு, அதிகாலை வேளையில் இத்தகைய வாகனங்களுக்கு தீ வைக்கின்றனர். ஹலசூர் அருகில், நேற்று அதிகாலை சாலை ஓரம் நின்றிருந்த 10க்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ அக்கம், பக்கத்து கடைகளுக்கும் தீ பரவியதில், அங்கிருந்த பொருட்களும் நாசமாகின. இதில் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பைக்குகள், கடைகள் தீப்பிடித்து எரிவதை கவனித்த அப்பகுதியினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர்.