| ADDED : டிச 04, 2025 05:46 AM
பெங்களூரு: பெங்களூரில் ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை, 700 ரூபாயை எட்டியுள்ளது. பெங்களூரில் காய்கறிகளின் விலை, நாளுக்கு நாள் ஏறுமுகமாகிறதே தவிர, குறையவில்லை. காய்கறிகள் வாங்கவே மக்கள் தயங்கும் சூழ்நிலை உள்ளது. முருங்கைக்காய் விலையை கேட்டால் மயக்கமே வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன், முருங்கைக்காய் விலை கிலோவுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை இருந்தது, இப்போது 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை எட்டியுள்ளது. சில்லரை விலையில், 700 ரூபாய்க்கு விற்கின்றனர். கே.ஆர்.மார்க்கெட் உட்பட பல மார்க்கெட்களில், ஒரு முருங்கைக்காய் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை அதிகம். மக்கள் வாங்குவதில்லை என்பதால், பல வியாபாரிகள் முருங்கைக்காய் விற்பதையே நிறுத்திவிட்டனர். முருங்கை இலை, காய், பூ, தண்டில் ஊட்டச்சத்து, இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். சுவையும் அதிகம். திருமணம் உட்பட மற்ற சுப நிகழ்ச்சிகளில், சாம்பாருக்கு முருங்கைக்காய் பயன்படுத்துகின்றனர். இப்போது ஆட்டிறைச்சி விலைக்கு சமமாக, முருங்கைக்காயின் விலை உயர்ந்ததால், யாரும் வாங்க முன் வருவது இல்லை. 'கர்நாடகாவுக்கு பெருமளவிலான முருங்கைக்காய்கள், தமழகத்தில் இருந்து தான் வருகின்றன. ஆனால், டிட்வா புயலின் விளைவாக, விளைச்சல் பாழாகியுள்ளது. தேவைக்கு ஏற்ற வரத்து இல்லை. இதனால் விலை உயர்ந்துள்ளது. தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை' என, வியாபாரிகள் கூறுகின்றனர்.