உடல்நிலை பாதிப்பால் தாய், மகன் தற்கொலை
துமகூரு: துமகூரு மாவட்டம், துருவகெரேவின், பிராமணர் வீதியில் வசித்தவர் கமலம்மா, 78. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ரகு, 55, உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். இளைய மகன் பெங்களூரில் வசிக்கிறார்.கமலம்மாவின் கணவர் காலமானதால், மூத்த மகன் ரகுவுடன் வசித்து வந்தார். ரகுவுக்கு திருமணமாகவில்லை. சமீப நாட்களாக தாயுக்கும், மகனுக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.நீண்ட காலமாக அவதிப்பட்டனர். இதனால் மனம் நொந்த இவர்கள், நேற்று மதியம், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.பெங்களூரில் வசிக்கும் இரண்டாவது மகன், தாய்க்கு போன் செய்தார். பல முறை போன் செய்தும் எடுக்கவில்லை. கலக்கம் அடைந்த மகன், பக்கத்து வீட்டாருக்கு போன் செய்து, தன் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அவர்களும் பார்த்தபோது, தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த துருவகெரே போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டனர். தற்கொலைக்கு முன், தாயும், மகனும் எழுதி வைத்த கடிதத்தில், 'உடல் நலம் பாதிப்பால் தற்கொலை செய்து கொள்கிறோம்' என குறிப்பிட்டிருந்தனர்.