உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தாய், மகன் கட்டாய மதமாற்றம்: இருவர் கைது

 தாய், மகன் கட்டாய மதமாற்றம்: இருவர் கைது

குடகு; பெற்ற மகனை, தாயே பலவந்தமாக மதம் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, போலீசாரிடம் தந்தை புகார் அளித்துள்ளார். குடகு மாவட்டம், குஷால்நகரில் வசிப்பவர் ராஜிவ். இவரது மனைவி சாஜிதா. இந்த தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளார். சாஜிதா சில ஆண்டுகளாக, குஷால் நகரில் உள்ள நிசர்கதாமா டூரிஸ்ட் சென்டர் கடை ஒன்றில், விற்பனை பெண்ணாக பணியாற்றுகிறார். இவருக்கு கடை உரிமையாளர்கள் சலீம் மற்றும் ஜலீல் அறிமுகம் ஏற்பட்டது. இவர்கள் சாஜிதாவுக்கு மூளைச்சலவை செய்தனர். இவர்களின் துாண்டுதலின்படி, ஒரு மாதத்துக்கு முன், சாஜிதா தன் மகனை யாருக்கும் தெரியாமல், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின், மஞ்சேரி கிராமத்தில் உள்ள மசூதிக்கு அழைத்து சென்றார். ஒரு மாதம் அங்கேயே தங்கியிருந்தனர். அங்கு சிறுவனின் மர்ம உறுப்பை, பலவந்தமாக அறுத்து 'சுன்னத்' செய்து, அவரையும், அவரது தாய் சாஜிதாவையும் மதம் மாற்றியதாக கூறப்படுகிறது. இதையறிந்த ராஜிவ், சில ஹிந்து அமைப்புகளின் உதவியுடன், குஷால் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். குஷால் நகரில் வசிக்கும் சிலர், ராஜிவுக்கு பக்கபலமாக நின்றனர். கேரளாவுக்கு சென்று மசூதியில் இருந்து சிறுவனை அழைத்து வந்து, காப்பகத்தில் ஒப்படைத்தனர். சாஜிதாவிடம் விசாரித்த போது, குரானால் துாண்டப்பட்டு சுய விருப்பத்துடன், மதம் மாறியதாக கூறியுள்ளார். ராஜிவின் புகாரின்படி, ஜலீல் மற்றும் சலீமை போலீசார் கைது செய்துள்ளனர். நிசர்கதாமா டூரிஸ்ட் சென்டரில் மதமாற்றம் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் காணாமல் போன ஹிந்து பெண்கள், சிறார்கள், நபர்கள் கேரளாவின் மஞ்சேரி கிராமத்தின் மசூதியில் கண்டுபிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே சலீம், ஜலீலிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !