பெற்றோர் சண்டையை விலக்கிய மகன் மீது தாய் சரமாரி தாக்குதல்
பெங்களூரு: பெற்றோரின் சண்டையை விலக்கி விட சென்ற, 9ம் வகுப்பு மாணவனை தாயே கண் மூடித்தனமாக தாக்கினார். தாய் மீது போலீசாரிடம் மகன் புகார் அளித்தார். பெங்களூரு, ஆவலஹள்ளியில் வசிக்கும் 14 சிறுவன், தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். தன் தாய், தந்தை மற்றும் தம்பியுடன் வசிக்கிறார். இவரது பெற்றோர் சிறு, சிறு விஷயங்களுக்கும் பிள்ளைகளின் கண் முன்னால் சண்டை போடுவர். கடந்த 25ம் தேதி இரவு 8:30 மணியளவில் சிறுவன் அறையில் தன் தம்பியுடன் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய், தந்தை உரத்த குரலில் சண்டை போட்டனர். இது சிறுவனின் படிப்புக்கு இடையூறாக இருந்தது. வெறுப்படைந்த அவர், பெற்றோரிடம் சண்டையை நிறுத்தும்படி கூறினார். கோபமடைந்த தாய், மகனை பிடித்து வேகமாக தள்ளினார். இதில் அவரது இடது கையில் காயம் ஏற்பட்டது. அப்போதும் கோபம் தணியாமல், செருப்பால் மகனை சரமாரியாக அடித்தார். இதில் சிறுவனின் மார்பு, முதுகில் காயம் ஏற்பட்டது. தந்தை தடுக்க முயற்சித்தும் முடியவில்லை. தாய் சிறிய கத்திக் கொண்டு வந்து, மகனை தாக்க முற்பட்டார். இதை கண்ட தந்தை, மனைவியை தடுத்து, மகனை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தார். தாயின் செயலால் மகன் மனம் நொந்தார். குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின், ஆவலஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று, தாய் மீது புகார் அளித்தார். போலீசாரும் சிறுவனின் தாய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரி கூறியதாவது: சிறுவனின் பெற்றோருக்கிடையே ஏதோ பிரச்னை உள்ளது. தன் தந்தைக்கு ஆதரவாக சிறுவன் நின்றுள்ளார். சிறுவனின் புகார் அடிப்படையில், அவரது தாயிடம் விசாரணை நடத்துவோம். தாய்க்கும், மகனுக்கும் கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.