மகனை தாக்கிய 8ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி நிர்வாகம், முதல்வர் மீது தாய் புகார்
மைசூரு: மைசூரில் எட்டாம் வகுப்பு மாணவரை தாக்கிய அதே வகுப்பின் மூன்று மாணவர்கள், நடவடிக்கை எடுக்காத ஆசிரியர், பள்ளி முதல்வர், நிர்வாகம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மைசூரு, ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரை, அதே வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள், பள்ளி கழிப்பறையில் அக்., 24ல் தாக்கியுள்ளனர். இதை பாதிக்கப்பட்ட மாணவன், வீட்டில் யாரிடமும் கூறவில்லை. அக்., 26ல் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சோர்வுடன் வந்த மகன் வலியால் துடித்துள்ளார். இதை பார்த்த தாய் சத்யபிரியா, மகனிடம், விபரத்தை கேட்டார். தன் வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள் தாக்கியதை தெரிவித்தார். கோபமடைந்த அவர், மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்தபோது, கடுமையாக தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அத்துடன், மகனின் விந்தணு பைகள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்து, மறுநாள் காலை பள்ளிக்கு சென்ற சத்யபிரியா, வகுப்பு ஆசிரியரிடம் விபரத்தை கூறினார். அதற்கு அவரோ, 'தாக்கிய மாணவர்கள் மோசமானவர். அவர்களுடன் உங்கள் மகனை போக வேண்டாமென அறிவுரை கூறுங்கள்' என்று மட்டுமே கூறியுள்ளார். இத்தகவலை பள்ளி முதல்வரிடம் கூறியபோது, அவரும் அலட்சியப்படுத்தியுள்ளார். மகனை தாக்கிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கோபமடைந்த அவர், ஜெயலட்சுமிபுரம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரிக்கின்றனர். இதுகுறித்து சத்யபிரியா கூறுகையில், ''பள்ளி முதல்வரை சந்திக்க முயற்சித்தபோது, என்னை பார்க்க மறுத்துவிட்டார். எனவே தான் பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர், மூன்று மாணவர்கள் மீது போலீசில் புகார் அளித்தேன். இதற்கு முன்னரும் என் மகனை தாக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி, வீட்டில் இருந்து பணத்தை கொண்டு வரும்படியும் மிரட்டி உள்ளார். என் மகனும், எங்களிடம் கூறாமல், பணத்தை கொடுத்துள்ளார். இவ்விஷயத்தை, இப்போது தான் கூறினார்,'' என்றார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் கூறுகையில், ''நான் பள்ளி வகுப்பு லீடராக உள்ளேன். கழிப்பறைக்கு சென்றபோது, 'எங்களுக்கு எதிராக ஆசிரியரிடம் கூறுவாயா?' என்று கூறி தாக்கினர். அத்துடன், என்னிடம் இருந்த 3,000 ரூபாய், மொபைல் போனை பறித்துக் கொண்டனர்,'' என்றார்.