துணை முதல்வருக்கு எதிராக முனிரத்னா ஆட்டம் மீண்டும் ஆரம்பம்
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பர்களும் இல்லை என்று சொல்வர். இது, கர்நாடக அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும். இன்று நண்பர்களாக இருப்பவர்கள், நாளை மிகப்பெரிய எதிரிகளாக மாறி விடுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., முனிரத்னா ஆகியோரை கூறலாம். முனிரத்னா, காங்கிரசில் இருந்த போது, சிவகுமாரின் நெருங்கிய நண்பராக இருந்தார். கடந்த 2013, 2018 சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்றதற்கு, சிவகுமாரின் பங்களிப்பு அதிகம். ஆனால், 2019ல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சர் ஆனார். சிவகுமாருக்கு எதிராக, அரசியல் செய்ய ஆரம்பித்தார். அப்போதிருந்து எதிரிகளாக மாறினர். இருவருக்கும் இடையில் நீயா, நானா போட்டி ஏற்பட்டது. பலாத்கார வழக்கு கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் டாக்டர் மஞ்சுநாத் அபார வெற்றி பெற்றார். சிவகுமாரின் தம்பி சுரேஷ் தோல்வியடைந்தார். ஆர்.ஆர்., நகர் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளரை விட, பா.ஜ., 99,000 ஓட்டுகளை கூடுதலாக பெற்றது. இது, சிவகுமாரின் கண்களை சிவக்க வைத்தது. இந்த தேர்தலுக்கு பின், முனிரத்னா மீது இரண்டு பலாத்கார வழக்குகள், ஒரு வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு, கான்ட்ராக்டரை ஆபாசமாக திட்டியதாக வழக்கு பதிவானது. தன் மீது வழக்கு மேல் வழக்குகள் பாய்ந்ததால், முனிரத்னா அதிர்ச்சி அடைந்து அமைதியானார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களை சந்திக்க சென்ற போது, அவர் மீது முட்டை வீசி தாக்கப்பட்டது. இதற்கு சிவகுமார் தான் காரணம் என குற்றம் சாட்டினார். ஆனால், அது பெரிதாக எடுபடவில்லை. பலாத்கார வழக்குகளில் சிக்கியதால், முனிரத்னாவை, பா.ஜ.,வும் கைவிட்டது. கட்சி சார்பில் நடந்த பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு அழைப்பு இல்லை. மீண்டு அதிரடி இந்நிலையில், முனிரத்னா மீது பதிவான இரண்டாவது பலாத்கார வழக்கில் அவர் குற்றமற்றவர் என, 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. ஒரு வழியாக இவ்வழக்கில் இருந்து தனக்கு நிம்மதி கிடைத்ததால் அவர் மகிழ்ச்சி அடைந்தார். வழக்கம்போல தனது அதிரடி அரசியலை துவக்கியுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சிவகுமார் நடத்திய நிகழ்ச்சிக்கு சென்று, தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி பிரச்னை செய்து மீண்டும், தனது அதிரடி அரசியலை துவக்கி உள்ளார். வரும் நாட்களில் தொகுதி முழுதும் சென்று மக்களை சந்தித்து, 'நமது தொகுதிக்கு துணை முதல்வர் சிவகுமார் எதுவுமே செய்யவில்லை' என்று, மக்களிடம் எடுத்து கூறி தனது செல்வாக்கை பெருக்கி கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம், முனிரத்னாவை மீண்டும் தலைதுாக்க சிவகுமார் விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். -- நமது நிருபர் -