கொலையான மாஜி டி.ஜி.பி., உடலில் 34 இடங்களில் கத்திக்குத்து
பெங்களூரு: 'கொலையான முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ் உடலில் 34 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடக முன்னாள் டி.ஜி.பி., ஓம்பிரகாஷ், 68. பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் குடும்பத்துடன் வசித்தார். கடந்த ஏப்ரல் 20ம் தேதி, வீட்டில் வைத்தே மனைவி பல்லவி, கத்தியால் குத்திக் கொலை செய்தார்.சொத்துத் தகராறில் நடந்ததாக கூறப்பட்டது. பல்லவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின், சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் ஓம்பிரகாஷ் பிரேத பரிசோதனை அறிக்கை இடம்பெற்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரது உடலில் 34 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதாகவும், தலையின் பின்பக்கம், கழுத்து, முதுகில் நான்கு முதல் ஐந்து கத்திக்குத்து காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஓம்பிரகாஷ் மகள் கிருதிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மனநல பிரச்னைக்கு சிகிச்சை எடுப்பதாக அவர் கூறி இருந்தார். ஆனால் நிமான்ஸ் டாக்டர்கள், கிருதி நல்ல நிலையில் இருப்பதாக கூறினர்.இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி கிருதிக்கு, சி.சி.பி., போலீசார் இதுவரை, நான்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.முன்ஜாமின் கேட்டு பெங்களூரு 53வது கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.