உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மணமணக்கும் மைசூரு வெற்றிலைக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு

 மணமணக்கும் மைசூரு வெற்றிலைக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு

பாரம்பரிய வாசம் உடைய, புவியியல் அங்கீகாரம் பெற்ற, மைசூரு சுற்றுப்பகுதிகளில் விளையும் வெற்றிலைக்கு, உலகம் முழுதும் தேவை அதிகரித்துள்ளது. இந்த பெருமையை தக்க வைத்து கொள்ள, தோட்டக்கலைத்துறை திட்டம் வகுத்துள்ளது . மன்னர்கள் காலத்தில் இருந்தே, மைசூரின் சுற்றுப்பகுதிகளில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு, நல்ல மவுசு உள்ளது. உணவு சாப்பிட்டு முடிந்த பின் வெற்றிலை போடுவது பலரின் பழக்கமாகும். சுப நிகழ்ச்சிகள், பூஜைகள் நடக்கும் இடங்களில், தாம்பூலம் கொடுக்க வெற்றிலையை பயன்படுத்துகின்றனர். மைசூரின் மாம்பள்ளி, உத்துார் உட்பட பல்வேறு கிராமங்களில் விளையும் வெற்றிலையில், ஆயுர்வேத மருத்துவ குணம் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பான நறுமணத்தால் மக்களை தன் வசமும் ஈர்க்கிறது. பிரதமர் பாராட்டு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், மைசூரின் வெற்றிலை குறித்து பேசினார். நம் பாரம்பரியத்தின் அடையாளம் என்று புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. புவியியல் அங்கீகாரம் பெற்ற, மைசூரின் வெற்றிலை மற்றும் மல்லிகை முக்கியமான பாரம்பரிய விளைச்சல்கள். இவற்றை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் பயனாக, நுாற்றுக்கணக்கான விவசாயிகள் மைசூரு வெற்றிலையை பயிரிடுகின்றனர்; நல்ல லாபமும் பெறுகின்றனர். இங்கு விளையும் வெற்றிலை, உலகம் முழுதும் தேவை உள்ளது. அதனால், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான், துபாய், மாலத்தீவு உட்பட பல நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் வருகின்றன. அதிக மவுசு தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மஞ்சுநாத் அங்கடி கூறியதாவது: மைசூரின் வெற்றிலைக்கு, வெளிநாடுகளில் அதிக மவுசு உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங் வசதி செய்து தர, தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போது முதன் முறையாக, மாலத்தீவுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. மைசூரின் பெருமைக்கு இதுவும் காரணம். இங்கு விளையும் வெற்றிலையில், அதிகமான மருத்துவ குணங்கள் உள்ளன. மக்களுக்கு தற்போது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அதிகரித்துள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவுகளை தேடுகின்றனர். மருத்துவ குணம் உடைய வெற்றிலையை பயன்படுத்துகின்றனர். இதை விளைவிக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை ஊக்கப்படுத்துகிறது. அனைத்து காலங்களிலும், வெற்றிலைக்கு தேவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை