உள்ளூர் செய்திகள்

 மைசூரு டூ லண்டன்

- நமது நிருபர் --: மைசூர் நகரை சேர்ந்தவர் நாகார்ஜுன் ஆனந்த் பகவான், 32. தொழிலதிபரான இவர், மோட்டார் சைக்கிள் பந்தய வீரரும் ஆவார். புதிய முயற்சியாக, மைசூரில் இருந்து லண்டன் வரை பைக்கில் செல்லும் பயணத்தை, நாகார்ஜுன் கடந்த 17ம் தேதி துவக்கி உள்ளார். மைசூரு அரண்மனையின் வடக்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் முன் இருந்து. இவரது பைக் பயணத்தை, மைசூரு பா.ஜ.,- எம்.பி., யதுவீர் துவக்கி வைத்தார். மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா வரை சென்று நாகார்ஜுனை அவரது நண்பர்கள், வழியனுப்பி வைத்து விட்டு வந்தனர். முன்னதாக, பைக் பயணம் குறித்து நாகார்ஜுன் கூறியதாவது: மைசூரு முதல் லண்டன் வரை, 20,000 கி.மீ.,யை பைக் மூலம் கடக்க உள்ளேன். இந்த பயணத்தை வெறும் சாகசத்திற்காகவோ அல்லது துாரத்தை கடப்பதற்காகவோ மட்டும் துவங்கவில்லை. உலக நாடுகளுக்கு இடையே உள்ள எல்லை தாண்டிய கலாசாரங்களை அறிந்து கொள்ளவும், புதிய மனிதர்களை சந்தித்து நட்புறவை வளர்க்கவும், இந்தியாவைப் பற்றிய நல்லெண்ண செய்திகளை உலக நாடுகளுக்கு பரப்புவதற்கும் இந்த பயணத்தை துவக்கியுள்ளேன். நேபாளம், திபெத், சீனா, கஜகஸ்தான், ரஷ்யா, எஸ்டோனியா, லாட்வியா, லிடுவேனியா, போலந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, குரோசியா, ஸ்லோவேனியா, இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகள் வழியாக லண்டனை சென்றடைய உள்ளேன். சர்வ தேச மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பின் உறுப்பினராக நான் இருப்பதால், நான் பயணிக்கும் நாடுகளில் உள்ள சக உறுப்பினர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாட உள்ளேன். எனது பயணம் 4 - 5 மாதங்கள் வரை நீடிக்கலாம். மருத்துவ உபகரண பொருட்கள், உணவுப்பொருட்களை எடுத்து எனது பைக்கின் பெட்டியில் சேமித்து வைத்துள்ளேன். நான் செல்லும் நாடுகளில் நண்பர்களின் உதவி எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை