நாராயண பரமனிக்கு டி.சி.பி., பதவி உயர்வு
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவால் அவமதிக்கப்பட்டு, விருப்ப ஓய்வுக்கு தயாரான தார்வாடின் உயர் போலீஸ் அதிகாரி நாராயண பரமனிக்கு, மாநில அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது.மத்திய அரசை கண்டித்து, நடப்பாண்டு ஏப்ரல் 28ம் தேதி பெலகாவியில், காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, பலர் பங்கேற்றனர். மேடையில் சித்தராமையா உரையாற்றியபோது, பா.ஜ., தொண்டர்கள் கூட்டத்தில் நுழைந்து கோஷமிட்டனர்.கோபமடைந்த முதல்வர் சித்தராமையா, அங்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்த ஏ.எஸ்.பி., நாராயண பரமனியை, மேடைக்கு அழைத்து திட்டியதுடன், கன்னத்தில் அறைய கையை ஓங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.பலரும் முதல்வரின் செயலை கண்டித்தனர். நடந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த ஏ.எஸ்.பி., நாராயண பரமனி, விருப்ப ஓய்வு பெற விரும்பினார். இது குறித்து முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதினார்.இதனால், மாநில அரசு தர்ம சங்கடத்துக்கு ஆளானது. அதன்பின் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உட்பட, உயர் போலீஸ் அதிகாரிகள், நாராயண பரமனியை சமாதானம் செய்ய முயற்சித்தனர்.முதல்வர் சித்தராமையாவும், தொலைபேசியில் பேசினார்.அதன்பின் விருப்ப ஓய்வு முடிவை கைவிட்டு, பணிக்கு ஆஜரானார்.இந்நிலையில் தார்வாட் ஏ.சி.பி.,யாக இருந்த நாராயண பரமனிக்கு, பெலகாவி சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.சி.பி.,யாக பதவி உயர்வு வழங்கி, மாநில அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.