கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: குடகுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை
குடகு: குடகில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர்.கர்நாடகாவில் கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால் குடகு மாவட்டம், பெரும் பேரிழப்பை சந்தித்தது. நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தின் ஏழு பேர் இறந்தனர்.மழை, வெள்ளத்திற்கு பல உயிர்கள் பலியாகின. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் தற்போது வழக்கத்தை விட முன்னதாகவே தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது. மலைநாடு பகுதிகளில் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகில் கனமழை பெய்கிறது.கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட பாடத்தால் உஷாரான குடகு மாவட்ட நிர்வாகம், இம்முறை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை முன்கூட்டியே குடகு வரவழைத்துள்ளது.பெங்களூரில் இருந்து 100க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் நேற்று குடகு சென்றனர். மடிகேரியில் உள்ள ஒரு அரங்கில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையில் பெங்களூரில் நேற்று மாலை 4:00 மணிக்கு மேல், மிதமான மழை பெய்தது. இந்த மழையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இரவில் குளிர் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஸ்வெட்டர் அணிந்தபடி செல்வதை பார்க்க முடிந்தது.