போலீஸ் ஏட்டுகளுக்கு புதிய தொப்பி தேர்வு
பெங்களூரு: கர்நாடகா போலீஸ் துறையில், ஏட்டுகளுக்கு புதிய தொப்பி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுதும் இந்த தொப்பியை போலீசார் பயன்படுத்த உள்ளனர்.கர்நாடக மாநில போலீஸ் துறையின் ஏட்டுகள், தற்போது ஆங்கிலேயர் காலத்தின் தொப்பிகளை அணிந்து, பணியில் ஈடுபடுகின்றனர்.இது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய தொப்பிகளால், சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் தொப்பிகளை மாற்றும்படி மத்திய சுகாதார துறையும் அறிவுறுத்தி இருந்தது.இதையடுத்து, தற்போது உள்ள தொப்பிகளுக்கு பதிலாக, புதிய வடிவ தொப்பியை மாற்றுவது தொடர்பாக, 'போலீஸ் கிட் விபரக்குறிப்பு குழு'வுடன் மாநில டி.ஜி.பி., சலீம் ஆலோசனை நடத்தினார்.இந்த நிலையில், கர்நாடக போலீஸ் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகளின் வருடாந்திர கூட்டம், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் நடந்தது.அப்போது, கர்நாடக ஏட்டுகள் அணியும் தொப்பியும், புதிய வடிவ தொப்பியுடன், தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, புதுடில்லி உட்பட பல்வேறு மாநில போலீஸ் துறையின் ஏட்டுகள் பயன்படுத்தும் தொப்பிகளையும் உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அவற்றில் ஒன்றை பரமேஸ்வர் தேர்வு செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''புதிய தொப்பியின் வடிவமைப்பு, போலீஸ் துறையின் தொழில்முறை கண்ணியத்தை நிலை நிறுத்தும். நவீனத்துவத்தை பிரதிபலிக்கும். மாநிலம் முழுதும் உள்ள போலீசாருக்கு விரைவில் புதிய தொப்பி கிடைக்கும்,'' என்றார்.