உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மின்விசிறியில் தற்கொலை தடுக்க புதிய சாதனம் தயார்

மின்விசிறியில் தற்கொலை தடுக்க புதிய சாதனம் தயார்

மாண்டியா : கல்லுாரி விடுதி அறைகளில், மாணவர்கள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை தடுக்க, ராஜிவ் காந்தி பல்கலைக்கழகம் புதிய திட்டம் வகுத்துள்ளது. மன அழுத்தம், காதல் தோல்வி உட்பட, பல்வேறு காரணங்களால் கல்லுாரி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக கல்லுாரி விடுதி அறைகளில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். மாண்டியா மருத்துவமனை மற்றும் கல்லுாரியில் விடுதி அறையில் சில மாதங்களுக்கு முன், அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவங்களுக்கு பின், ராஜிவ்காந்தி பல்கலைக்கழகம் விழித்துக் கொண்டுள்ளது. இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த திட்டம் வகுத்துள்ளது. விடுதி அறைகளின் மின் விசிறிகளில், 'ஆன்டி சூசைட் டிவைஸ்' என்ற சாதனத்தை பொருத்த திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் பொருத்தப்பட்ட மின் விசிறியில், மாணவர்கள் துாக்கிட்டு கொள்ள முற்பட்டால், மின் விசிறியின் எடை அதிகரித்து, உடனடியாக மின் விசிறியின் கொக்கி தானாகவே கழன்று விழும். இது மட்டுமின்றி, சாதனத்தில் இருந்து எச்சரிக்கை சைரன் ஒலிக்கும். விடுதி ஊழியர்கள் அறைக்கு சென்று, மாணவரின் தற்கொலையை தடுப்பர். ஏற்கனவே மாண்டியா மருத்துவ கல்லுாரியில் இந்த சாதனத்தை சோதனை முறையில் பொருத்தினர். சாதனம் நல்ல முறையில் செயல்பட்டு பயன் அளிக்கிறது. இதை அனைத்து இடங்களிலும் பொருத்த, ராஜிவ் காந்தி பல்கலைக்கழக நிர்வாகம் தயாராகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !