உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹெப்பாலில் புதிய மேம்பாலம் திறப்பு

ஹெப்பாலில் புதிய மேம்பாலம் திறப்பு

ஹெப்பாலில் புதிய மேம்பாலம் திறப்பு

பெங்களூரு கே.ஆர்., புரம், நாகவாராவில் இருந்து மேக்ரி சதுக்கத்திற்கு வருவோரும்; சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வருவோரும் ஹெப்பால் மேம்பாலம் வழியாக வர வேண்டும். இதனால் பரபரப்பான நேரத்தில் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை தவிர்க்க, வாகன ஓட்டிகள் வசதிக்காக, பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஹெப்பாலில் 80 கோடி ரூபாய் செலவில், 700 மீட்டர் நீளத்திற்கு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள், 2023ல் துவங்கின. பல மாதங்களாக நடந்த வந்த மேம்பாலப் பணிகள் முடிந்து, நேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின், சிவகுமார் கூறியதாவது: இங்கு மேம்பாலம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. நான், பெங்களூரு மாவட்ட பொறுப்பு ஏற்ற பின், மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இதில், முதல்கட்டமாக 700 மீட்டருக்கான புதிய மேம்பாலம் திறக்கப்பட்டு உள்ளது. அடுத்ததாக, எஸ்டீம் மால் அருகில் இருந்து மேக்ரி சதுக்கத்துக்கு செல்லும் வழியில், மற்றொரு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி, வரும் நவம்பரில் முடிவடையும் என்று பி.டி.ஏ., தலைவர் உறுதி அளித்துள்ளார். ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு சந்திப்பு வரையில் 16.5 கி.மீ., தொலைவுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர் அழைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடமும் விளக்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மேம்பாலத்தை திறப்பதற்கு முன்பு, துணை முதல்வர் சிவகுமார், 1981ம் ஆண்டு மாடல், 'எஜ்டி' பைக்கை மேம்பாலத்தில் ஓட்டிச் சென்றார். பின், அவர் கூறுகையில், ''இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லுாரி கால நினைவு வந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !