துங்கபத்ரா அணையின் 19வது மதகிற்கு புதிய கேட்
விஜயநகரா: துங்கபத்ரா அணையின் 19வது மதகில் பொருத்துவதற்கு, புதிய கேட் தயாராகி வந்துள்ளது.விஜயநகரா - கொப்பால் மாவட்ட எல்லையான முனிராபாத்தில், துங்கபத்ரா அணை உள்ளது. இந்த அணையில் மொத்தம் 33 மதகுகள் உள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி, அணையின் 19வது மதகின் கேட், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.கேட் இல்லாத மதகு வழியாக மூன்று நாட்களில் 13 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறியது. துங்கபத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆந்திராவை சேர்ந்த இன்ஜினியர் கண்ணையா நாயுடு மேற்பார்வையில் 19வது மதகில் தற்காலிக கேட் பொருத்தப்பட்டது.புதிய கேட்டை தயாரிக்கும் பொறுப்பு, கதக் அடவிசோமாபுரா கிராமத்தில் செயல்பட்டு வரும், குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. புதிதாக 20 அடி அகலம் 60 அடி நீளத்தில் கேட் தயாரிக்கப்பட்டது.மொத்த எடை 49 டன். இந்த கேட் நான்காக பிரிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு முன்பு கதக்கில் இருந்து லாரி மூலம் முனிராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை லாரி வந்தடைந்தது. கிரேன் மூலம் கேட் பாகங்கள் எடுத்து வைக்கப்பட்டன.தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 21,612 கன அடி தண்ணீர் வந்தது. இந்த சூழ்நிலையில் கேட் பொருத்துவது கடினம் என்றும், அக்டோபர் அல்லது நவம்பரில் பணிகள் துவங்கும் எனவும், துங்கபத்ரா அணை இன்ஜினியர் ஆர்.கே.ரெட்டி கூறியுள்ளார்.