அபராதம் பாக்கி வைத்த வாகனங்கள் அடையாளம் கண்டறிய புதிய திட்டம்
பெங்களூரு: வாகன ஓட்டிகள் எத்தனை முறை, போக்குவரத்து விதிகளை மீறினர், எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களை, சம்பந்தப்பட்ட வாகனம், சதுக்கத்தில் நின்றவுடனே அந்த இடத்தில் திரையில் ஒளிரும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமரா பொருத்த, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, பெங்களூரு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தற்போது சிக்னல்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை மீறினால், அதை பதிவு செய்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றன. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு வரப்படும். வாகன ஓட்டிகள் எத்தனை முறை, சாலை போக்குவரத்து விதிகளை மீறினர், எவ்வளவு அபராதம் கட்ட வேண்டும் என்ற தகவல்கள், சம்பந்தப்பட்ட வாகனம் சிக்னல்களில் நின்றவுடனேயே, அங்குள்ள திரையில் வெளிப்படையாக ஒளிரும் வசதி செய்யப்படுகிறது. தனியாருடன் ஒருங்கிணைந்து போக்குவரத்து போலீசார் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர். பெங்களூரின், டிரினிட்டி சதுக்கத்தில், இந்த வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தனியார் நிறுவனம் திரை பொருத்தியுள்ளது. இத்திரையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, அபராதம் பாக்கி வைத்துள்ள வாகனங்களின் விபரங்களின் டேட்டாவை, போக்குவரத்து பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர். அபராதம் பாக்கி வைத்துள்ள வாகனங்கள், டிரினிட்டி சதுக்கத்தில் நின்றாலோ அல்லது சதுக்கத்தை கடந்து சென்றாலோ, அந்த வாகனங்களை கேமராக்கள் பதிவு செய்யும். அந்த வாகனங்கள் மீது பாக்கியுள்ள வழக்கு விபரம் திரையில் ஒளிரும். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, அபராதத்தை செலுத்தும்படி எச்சரிக்கும். இந்த நடவடிக்கையில், போக்குவரத்து போலீசாருடன், கார்ஸ் - 24 என்ற தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இத்திட்டம் வெற்றி அடைந்தால், நகரின் அனைத்து சதுக்கங்களிலும், திரைகள் பொருத்தப்படும். சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது குறித்து, வாகன பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, எங்களின் நோக்கமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.