கர்ப்பிணியர் உயிரிழப்பை தடுக்க ரூ.139 கோடியில் புதிய திட்டம்
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது ஏற்படும் கர்ப்பிணியர் உயிரிழப்புகளை தடுக்க மாநில அரசு 139 கோடி ரூபாயில் திட்டமிட்டு உள்ளது. கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின்போது கர்ப்பிணியர் உயிரிழக்கும் சம்பங்கள் அடிக்கடி நடக்கின்றன. மருத்துவ குறைபாடு, தாயின் உடலில் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. கர்நாடகாவில், 2024 - 25ம் ஆண்டில் மட்டும் பிரசவத்தின்போது 530 கர்ப்பிணியர் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இறப்புகளில் 70 சதவீதம் தடுக்கக்கூடியவை என, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்ட மாநில அரசு, பிரசவத்தின்போது கர்ப்பிணியர் உயிரிழப்பதை தடுக்க 139 கோடி ரூபாயில் திட்டம் வகுத்துள்ளது. இத்திட்டத்தின்படி, மகப்பேறு ஐ.சி.யூ.,க்களின் எண்ணிக்கையை 34ல் இருந்து 37 ஆக உயர்த்துதல், மருத்துவமனைகளில் தாய் மற்றும் சேய் பிரிவில் படுக்கை எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், அனைத்து மாவட்ட அளவில் பிரசவம் குறித்து உடனடி தகவல் தெரிவிக்க உதவி மையங்கள் நிறுவுதல், அரசு மருத்துவமனையில் நடக்கும் பிரசவம் குறித்து கண்காணிக்க புதிய மென்பொருள் தொழில்நுட்பம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது: மாவட்ட மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுவோரில் மோசமான உடல்நிலையுடன் உள்ளவர்கள் வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது. இப்படி கொண்டு செல்லும்போதே சிலர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகாவில் உள்ள தாலுகா மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றில் பிரசவம் செய்வதில், அதிக அனுபவம் கொண்ட டாக்டர் அடங்கிய குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.