புதிய திறன் மேம்பாட்டு கொள்கை ரூ.4,432 கோடியில் திட்டங்கள்
பெங்களூரு:' ''வருங்கால இளைஞர்களுக்காக புதிய கர்நாடக திறன் மேம்பாட்டுக் கொள்கை - 2025 உருவாக்கப்பட்டுள்ளது,'' என, மருத்துவ கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்துள்ளார். பெங்களூரில் அவர் அளித்த பேட்டி: தேசிய அளவில் திறமையான பணியாளர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள், இளைஞர்களை திறமையானவர்களாக மாற்றுவது அவசியமாகும். இதற்காக, கர்நாடக திறன் மேம்பாட்டுக் கொள்கை ---- 2025 உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்கை மூலம் கல்வி, பணிக்கு செல்வதற்கான திறமைகளை மேம்படுத்திக் கொள்வது குறித்து மாணவர்கள், இளைஞர்களுக்கு கற்றுத் தரப்படும். இளைஞர்களுக்கு கணினி பயிற்சி, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 4,432 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் மூலம் 2032ம் ஆண்டிற்குள் கர்நாடகா ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரத்தை அடைய முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.