உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மூத்த குடிமக்களுக்கு மனநல சிகிச்சை வீடு தேடி வழங்க நிமான்ஸ் திட்டம்

மூத்த குடிமக்களுக்கு மனநல சிகிச்சை வீடு தேடி வழங்க நிமான்ஸ் திட்டம்

பெங்களூரு: மனநோயால் அவதிப்படும் மூத்த குடிமக்களின் வீட்டுக்கே சென்று, சிகிச்சை அளிக்க, 'நிமான்ஸ்' முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, நிமான்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: நிமான்ஸ் மருத்துவமனையின், மனநல சிகிச்சை பிரிவு, மூத்த குடிமக்களின் நலனுக்காக, 'நிமான்ஸ் வயோமானசா சஞ்சீவினி கிரஹா' என்ற திட்டத்தை வகுத்தது. இத்திட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் மனநலம் தொடர்பான நோய்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படும். பெங்களூரு தெற்கில் சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட முதியோர் இல்லங்களுக்கு சென்று மன நலம் பாதிப்புள்ளவர்களை அடையாளம் கண்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதியோர் ஆஸ்ரமங்களில் இருப்பவர்கள் மட்டுமின்றி, 65 வயதுக்கு மேற்பட்ட ஏழைகள், நடுத்தர குடும்பத்தினருக்கும், அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று, சிகிச்சை அளிக்கப்படும். மறதி நோய்க்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டத்துக்கு முதியோர் ஆஸ்ரமங்கள், அரசு சாரா தொண்டு அமைப்புகள், மாணவர்கள், தன்னார்வ சேவகர்களின் உதவி பெறப்படும். மூத்த குடிமக்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டால், நிமான்ஸ் மருத்துவ குழுவினர், அவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பர். இந்த திட்டத்தை செயல்படுத்த, நிமான்ஸ் மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மனநல வல்லுநர்கள் சந்திரசேகர் மற்றும் ஸ்ரீகலா பரத் தலா 1.2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். மூத்த குடிமக்களை வாட்டி வதைக்கும், பல்வேறு மனநல பாதிப்புகளை சரி செய்யவும், அவர்களின் பராமரிப்புக்கும் இத்திட்டம் உதவியாக இருக்கும். அரசு உதவியுடன், நன்கொடையாளர்கள் உதவ முன் வந்தால், திட்டத்தின் நோக்கம் நிறைவேறும். மூத்த குடிமக்களின் மனநல நோய்களுக்கு சிகிச்சையளிக்க, தன்னார்வ சேவகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அனைத்து வயதினரும் இதில் பங்கேற்க முன் வரலாம். ஆர்வம் உள்ளவர்களுக்கு, நிமான்சிலும், ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்கள், மூத்த குடிமக்களின் மன நலத்துக்காக பணியாற்ற வேண்டும். சிகிச்சை அளிப்போருக்கு சான்றிதழ் அளிக்கப்படும். திட்டத்தில் பங்கேற்று, பயிற்சி பெற்று மூத்த குடிமக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் உள்ளவர்கள், 99004 18922 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை