சிறுமி கர்ப்பத்தை மறைக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி...கைது!: தங்கவயல் மாவட்ட போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
கர்நாடகாவில் சிறுமியர் திருமணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில், நகரப்பகுதிகளை விட கிராமப்புறங்களில் அதிக அளவு சிறுமியர் திருமணங்கள் நடக்கின்றன. கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,799 சிறுமியருக்கு திருமணம் நடந்ததாக பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தெரிவித்தார். இது, மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிகாரிகள் உஷார் இதனால், கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அனைவரும், சிறுமியர் திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கினர். குறிப்பாக, குழந்தை திருமணங்கள் குறித்து முதலில் தகவல் பெறும், மாவட்ட அளவிலான குழந்தை பாதுகாப்பு மைய ஹெல்ப்லைனில் வேலை பார்க்கும் அதிகாரிகள், உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், சிறுமியின் ஏழு மாத கர்ப்பத்தை மறைக்க, லஞ்சம் வாங்கியதாக, கோலார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளர் கல்யாண்குமார், 30 என்பவரை, கேசம்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் நேற்று கூறியதாவது: கடந்த சில வாரங்களுக்கு முன், கல்யாண்குமாருக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து, மொபைல் போன் மூலம் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், 'கேசம்பள்ளி அருகே உள்ள கோகிலஹள்ளி கிராமத்தில், 17 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து விசாரிக்கவும்' என தெரிவித்து உள்ளார். குடும்பம் ஒப்புதல் இது குறித்து, கல்யாண்குமார் விசாரணையில் இறங்கினார். மொபைல் போனில் வந்த தகவல்படி, சிறுமி குடும்பத்தினரிடம் விசாரித்தார். அவர்களும், சிறுமி கர்ப்பமாக இருப்பதை ஒப்புக்கொண்டனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கல்யாண்குமார், 'சிறுமி கர்ப்ப விஷயத்தை போலீசிடம் தெரிவித்தால், உங்கள் குடும்பத்தினர், சிறையில் கம்பி எண்ண வேண்டி இருக்கும். போலீசிடம் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமென்றால் 50,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும்' என, சிறுமியின் பெற்றோரை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அவர்கள், வட்டிக்கு பணம் வாங்கி, 30,000 ரூபாயை கொடுத்து உள்ளனர். மீதி பணத்தை வழங்குவதற்கு தாமதம் ஆனதால், கோபம் அடைந்த கல்யாண்குமார், போலீசிடம் கூறுவதாக மீண்டும் மிரட்டி உள்ளார். செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர், தங்களுக்கு வேண்டியவர்களிடம் நடந்த விஷயத்தை தெரிவித்து உள்ளனர். அவர்களோ, 'பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள்; உங்களை மிரட்டி பணம் கேட்பதா. நீங்களே போலீசில் புகார் செய்யுங்கள்' என்றனர். உடனடியாக சிறுமியின் பெற்றோர், கேசம்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அவர்கள் விசாரித்ததில், அதிகாரி கல்யாண்குமார் லஞ்சம் வாங்கியது நிரூபணமானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, தங்கவயல் சப் - ஜெயிலில் அடைக்கப்பட்டார். 'போக்சோ' வழக்கு சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் குறித்து போலீசார் விசாரித்தனர். அந்நபர், சிறுமியின் கிராமத்தை சேர்ந்த கிரண்குமார், 30 என்பதும், சிறுமியை ஓராண்டுக்கு முன், தமிழகத்தின் ஓசூர் கோவிலில் திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கிரண்குமார் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கோலார் சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சம்பவம், தங்கவயல் உட்பட கோலார் மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரியே லஞ்சம் வாங்கியதால் பலரும் திட்டி தீர்த்தனர்.