மருந்து கடைகளில் அதிகாரிகள் சோதனை
பெங்களூரு: தனியார் பிராண்டட் மருந்துகளை விற்பதாக புகார் வந்ததால், ஜெனரிக் மருந்து கடைகளில் உணவு பாதுகாப்பு மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஜெனரிக் எனும் தனிப்பெயர் கொண்ட மருந்துகளை விற்கும் ஆங்கில மருந்து கடைகளில் குறைந்த விலை மருந்துகளை மட்டுமே விற்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், பெரும்பாலான மருந்து கடைகளில், அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தனியார் நிறுவனங்களின் பிராண்டட் மருந்துகள், அழகு சாதனங்களை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே கர்நாடகா முழுதும், 150 ஜெனரிக் மருந்து கடைகளில் உணவு பாதுகாப்பு, மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் பல மருந்து கடைகளில், தனியார் நிறுவனங்களின், பிராண்டட் மருந்துகள், அழகு சாதனங்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தனர். நிர்ணயித்த மருந்துகளை தவிர, தனியார் நிறுவனங்களின் மருந்துகளை விற்றால், லைசென்சை ரத்து செய்வதாக எச்சரித்தனர். மருந்து கடைகளில் இருந்த வேறு பிராண்டுகளின் மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர்.