உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பகல் கொள்ளை; பண்டிகை பெயரில் பல மடங்கு கட்டணம் வசூல்

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பகல் கொள்ளை; பண்டிகை பெயரில் பல மடங்கு கட்டணம் வசூல்

பெங்களூரு: பண்டிகைகள் வந்தால், தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்தான். பண்டிகை நாட்களில், பல ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வாடிக்கை. இதனால் பயணியர் எண்ணிக்கை, பல மடங்கு அதிகமாக இருக்கும். இவர்களின் வசதிக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதல் பஸ்களை இயக்குகின்றன. முன்பதிவு இம்முறையும் விநாயகர் சதுர்த்தி, தசராவை முன்னிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி., கூடுதல் பஸ்களை இயக்கியது. அதே போன்று, தீபாவளிக்காக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்லும் பயணியருக்காக 2,000 கூடுதல் பஸ்களை இயக்கியுள்ளது. ஆனாலும் பயணியர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால், இந்த பஸ்கள் போதுமானதாக இல்லை. அனைத்து பஸ்களின் இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பயணியர் கட்டாயத்தின் பேரில், தனியார் பஸ்களில் பயணிக்கின்றனர். சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும் தனியார் பஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தங்கள் இஷ்டப்படி டிக்கெட் கட்டணம் வசூலித்து, பயணியரிடம் கொள்ளை அடிக்கின்றனர். ஒவ்வொரு முறையும், போக்குவரத்து துறை அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என, எச்சரிக்கிறதே தவிர, நடவடிக்கை எடுப்பது இல்லை. இது தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு, சாதகமாக உள்ளது. முடிந்த வரை அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். வழக்கமான நாட்களில், பெங்களூரில் இருந்து ஷிவமொக்கா செல்ல, தனியார் பஸசில் 500 ரூபாய் முதல் 650 ரூபாய் கட்டணம் இருக்கும். இப்போது 1,000 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். பெங்களூரில் இருந்து மங்களூருக்கு பயணிக்க, 650 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை இருந்த கட்டணத்தை, 2,200 ரூபாயாக உயர்த்தி உள்ளனர். பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு பயணிக்க வழக்கமான நாட்களில், 920 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை இருக்கும். தற்போது 4,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும், தனியார் பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். குற்றச்சாட்டு அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என, பயணியரும்; அதிக கட்டணம் வசூலிக்க அரசு தான் காரணம் என, தனியார் பஸ் உரிமையாளர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நடராஜ் சர்மா கூறியதாவது: நாங்கள் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து, போக்குவரத்து தொழில் நடத்துகிறோம். பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறோம். எங்களுக்கு அரசின் உதவி கிடைப்பது இல்லை. பண்டிகை நேரத்தில், பயண கட்டணத்தை உயர்த்தும் கட்டாயத்துக்கு, எங்களை தள்ளுவதே அரசு தான். 'சக்தி' திட்டத்தின் கீழ். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். இதற்கான தொகையை, போக்குவரத்து கழகங்களுக்கு, அரசு செலுத்துகிறது. ஆனால் எங்களுக்கு எந்த சலுகையும் இல்லை. வரிகளை ரத்து செய்தால், நாங்களும் பயண கட்டணத்தை குறைப்போம். சக்தி திட்டத்தால், தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்கள் வீதிக்கு வந்துள்ளனர். முதலில் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். நாங்கள் மட்டுமின்றி, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களின் பயண கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., அதிகாரிகள், எங்கள் மீது பொய்யான வழக்கு பதிவு செய்து, தொல்லை தருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை