கன்னடம் பேசினால் அபராதம் தனியார் பள்ளிக்கு எதிர்ப்பு
பெங்களூரு: பிரபல தனியார் பள்ளியில் கன்னடம் பேசும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கு கே.டி.ஏ., தலைவர் புருஷோத்தமா பிலிமலே கண்டனம் தெரிவித்து உள்ளார். பெங்களூரு குமாரபார்க்கில் உள்ள பிரபல தனியார் பள்ளியான சிந்து உயர்நிலை பள்ளியில், மாணவர்கள் கன்னடத்தில் பேசினால் தண்டிக்கப்படுவதாகவும், அபராதம் விதிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு கே.டி.ஏ., எனும் கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் புருஷோத்தமா பிலிமலே கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ''நகரின் முன்னணி பள்ளிகளில் ஒன்றில் மாணவர்கள் கன்னடத்தில் பேசினால் அபராதம் விதிக்கப்படுவது கண்டனத்திற்குரியது. இது அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கிறது. ' 'இது குறித்து தொடக்க கல்வி அமைச்சர் மது பங்காரப்பா மற்றும் தலைமை செயலர் ஷாலினிக்கு கடிதம் எழுதி உள்ளேன். அவர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.