உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வரி செலுத்தாத பிற மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்

 வரி செலுத்தாத பிற மாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்

சிக்கபல்லாபூர்: வரி செலுத்தாத பிற மாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சொகுசு ஆம்னி பஸ்களை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெங்களூரை சேர்ந்த ஆம்னி சொகுசு பஸ் மீது பைக் மோதியதில் தீப்பிடித்து எரிந்ததில், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஆந்திராவில் நடந்த இச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோன்ற மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது என்பதில் மாநில அரசு தீர்க்கமாக உள்ளது. இதனால், மாநிலத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து விதமான பஸ்களிலும் அவசர கதவுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதுபோல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆம்னி பஸ்களின் தரம் குறித்து ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இந்த வகையில் சிக்கப்பல்லாபூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 44ல் அகாலகுர்கி என்ற பகுதியில், நேற்று ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக பெங்களூரு நோக்கி வந்த ஆம்னி சொகுசு பஸ்கள் சோதனையிடப்பட்டன. இதில், பிற மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பஸ்கள், மாநிலத்தில் வரி செலுத்தாமல், அனுமதியின்றி இயங்கி வருவது தெரிந்தது. இதையடுத்து, ஆந்திர பிரதேசம், ஹரியானா, தெலுங்கானா போன்ற பிற மாநிலத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின் போது, பஸ்சில் இருந்த பயணியர் கீழே இறக்கி விடப்பட்டதால், அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதை புரிந்து கொண்ட அதிகாரிகள், பயணியருக்கு மாற்று பஸ்கள் ஏற்பாடு செய்து, அவர்களை பெங்களூரு அனுப்பி வைத்தனர். பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி