உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காகிதம் இல்லா பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா தாக்கல்

காகிதம் இல்லா பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா தாக்கல்

பெங்களூரு: ''துணை சார் பதிவாளர் அலுவலகத்தில், பல முறைகேடுகள் நடந்து வருவதை தடுக்கும் வகையில், இனி காகிதம் இல்லாத வகையில், டிஜிட்டல் முறையில் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும்,'' என்ற விதிமுறை கொண்ட பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நேற்று தாக்கலானது. வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா, நிலம் சட்ட திருத்த மசோதாவை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். பின், அவர் கூறியதாவது: தனியார் நபர்களின் விவசாய நிலத்தை, கல்வி நிறுவனங்கள் அல்லது சிறிய தொழிற்சாலைகளுக்கு வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த அனுமதிக்காக துறையின் முதன்மை செயலர் வரை செல்ல வேண்டி இருந்தது. புதிய சட்ட திருத்தத்தின் படி, மாவட்ட கலெக்டருக்கே அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய நிறுவனங்களுக்கு, 9.88 ஏக்கர் நிலம் வரை வாங்குவதற்கு கலெக்டர் அனுமதி வழங்கலாம். குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைக்கு பெற்று கொண்டு, வேறு தொழில் செய்வதற்கு அனுமதி கேட்கின்றனர். இதற்கு அனுமதி வழங்க முடியாது. மேலும், அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்கள், சட்டத்தில் இருந்து தப்பித்து கொண்டு இருந்தனர். இனி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் அல்லது அவர்களுக்கு உதவும் அதிகாரிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சில செல்வாக்குமிக்க நபர்கள், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கொண்டு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று தடை உத்தரவு பெற்று வந்தனர். இத்தகைய செயல்களுக்கு இனி கடிவாளம் போடப்படும். எவ்வளவு நெருக்கடி வந்தாலும், இந்த சட்ட திருத்த மசோதா, அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, பத்திரப்பதிவு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்து பேசிய கிருஷ்ணபைரேகவுடா, ''துணை சார் பதிவாளர் அலுவலகத்தில், பல முறைகேடுகள் நடந்து வருவதை தடுக்கும் வகையில், இனி காகிதம் இல்லாத வகையில், டிஜிட்டல் முறையில் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை