அமைச்சர் அலுவலகத்தில் திருட்டு; விசாரணைக்கு பரமேஸ்வர் உத்தரவு
பெங்களூரு: அமைச்சர் பைரதி சுரேஷின் அலுவலகத்திற்கு வந்தவரின், நகை, பணம் இருந்த பை திருடப்பட்டது பற்றி, விசாரணை நடத்த, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் உத்தரவிட்டு உள்ளார். கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ். விதான் சவுதாவில் உள்ள இவரது அலுவலகத்திற்கு, கடந்த, 6 ம் தேதி நவீன் என்பவர் வந்தார். அவர் கையில் எடுத்து வந்த பையில், 1.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 300 கிராம் தங்க நகை இருந்துள்ளது. அமைச்சரை பார்த்து விட்டு புறப்பட்ட நவீன், பையை மறந்து விட்டு சென்றார். அந்த பையை திருடிய, நிர்வாக சீர்திருத்த துறை, 'டி' குரூப் ஊழியர் அந்தோணி, 52 என்பவர் கைது செய்யப்பட்டார். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அலுவலகம் இருக்கும் விதான் சவுதாவில், அமைச்சர் அலுவலகத்திலேயே திருட்டு நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதுகாப்பு பணியில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பெங்க ளூரில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் பைரதி சுரேஷ் அலுவலகத்திற்கு வந்தவரின் நகை, பணம் இருந்த பை திருடப்பட்டது, இரண்டாவது விஷயம். முதலில் அந்த பையை உள்ளே கொண்டு வர யார் அனுமதித்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த பையின் உரிமையாளர் நவீன், எந்த நுழைவாயில் வழியாக உள்ளே சென் றார். அமைச்சர் அலுவலகம் வரை பணம், நகை இருந்த பையை கொண்டு சென்றது வரை, யாரும் கவனிக்கவில்லையா என்பதே எனது கேள்வி. இதுகுறித்து விசாரித்து இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, கூடுதல் கமிஷனருக்கு உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.