துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம்; மே 1ல் அமல்படுத்த முதல்வர் உறுதி
பெங்களூரு; ''மே 1ம் தேதி முதல் துப்புரவுத் தொழிலாளர்களின் பணி, நிரந்தரமாக்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தார்.பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று, மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் 25ம் ஆண்டு விழாவை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:பசவண்ணர் சொல்படி நீங்கள் கடுமையாக பணியாற்றி வருகிறீர்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் செய்யும் வேலையை, வேறு யாராலும் செய்ய இயலாது. எனவே உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. சுகாதார அட்டை
மாநில தலைமைச் செயலருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; அனைத்துப் பணிகளும் புனிதமானது. உங்களை அவமதிக்கும் வகையில் நடத்துவது சரியல்ல. உங்களுக்கும் பணி மரியாதை, கவுரவம் கொடுக்க வேண்டும். எனவே மே 1ம் தேதி முதல் உங்கள் பணியும், ஓட்டுநர் பணியும் நிரந்தரமாக்கப்படும்.உங்களின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும். அவர்கள் படித்தால் தான் சுயமரியாதை ஏற்படும். அனைவரும் திறமையானவர்கள்.வாய்ப்பு கிடைப்பது மிகவும் முக்கியம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணமில்லா சுகாதார அட்டை வழங்கப்படும். உங்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும்.உங்களில் இருந்து வந்து மேயர் ஆனவர் நாராயணன். உங்களுக்காக போராடியதில் அவரின் பங்கு மிகவும் அதிகம்.நாராயணன் மூலம் எங்களுக்கு வந்த உங்களின் கோரிக்கைகள் பலவற்றை அரசு நிவர்த்தி செய்து உள்ளது. ஒப்பந்த முறையை ரத்து செய்த எங்கள் அரசு, உங்களின் சம்பளத்தை உங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுத்தது. வெளிநாட்டு சுற்றுலா
துப்புரவுத் தொழிலாளர்களுக்காக மைசூரில் தலா 6.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 524 வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இதே சித்தராமையா தான், உங்களின் ஊதியத்தை 7,000 ரூபாயில் இருந்து 17,000 ரூபாயாக உயர்த்தினேன்.நகரை சுத்தமாக்க நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள். உங்கள் குழந்தைகள் இப்பணி செய்யக்கூடாது. வேறு பணிகளில் பணியாற்ற வேண்டும். அப்போது தான் நீங்கள் முன்னேற முடியும்.ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.