உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் நிரந்தர கண் பரிசோதனை மையம்

மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் நிரந்தர கண் பரிசோதனை மையம்

பெங்களூரு: இலவசமாக கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை செய்வதுடன், கண்ணாடி வழங்கும் 'ஆஷா கிரணா' திட்டம், மாநிலம் முழுதும் விஸ்தரிக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில், பார்வை பரிசோதனை மையங்கள் நிரந்தரமாக அமைக்கப்படுகின்றன.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை செய்து, இலவச கண்ணாடி வழங்கும் நோக்கில், ஆஷா கிரணா திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில் வகுக்கப்பட்ட இத்திட்டம், சோதனை முறையில் சிக்கபல்லாபூர், கலபுரகி, ஹாவேரி, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

4 மாவட்டங்கள்

அதன்பின் அடுத்தடுத்து மாநிலம் முழுதும் விஸ்தரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்திருந்தது. ஆண்டுதோறும் நான்கு மாவட்டங்களில், திட்டம் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கட்டம், கட்டமாக செயல்படுத்தினால், ஏழு ஆண்டுகளாகும்.மக்களுக்கு விரைவில் திட்டத்தின் பயன் கிடைக்க வேண்டும் என்பது, அரசின் நோக்கம். இதனால் ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு 45 கோடி ரூபாய் செலவிட, அரசு அனுமதி அளித்துள்ளது. ஆஷா ஊழியர்கள் அல்லது சுகாதாரத்துறை ஊழியர்கள், வீடு வீடாக சென்று, முதற்கட்ட கண் பரிசோதனை செய்வர். இரண்டாவது கட்ட பரிசோதனை மருத்துவமனையில் நடத்தப்படும். அவசியம் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்யப்படும். இங்கு தொடர்ந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.வயது ஆக, ஆக பல்வேறு காரணங்களால், கண் பார்வை மந்தமாகும். பிரச்னைகள் ஏற்படும். இதை அலட்சியப்படுத்தினால், பார்வையை இழக்கும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கும் நோக்கில், ஆஷா கிரணா திட்டம் செயல்படுத்தப்பட்டது.தேவைப்படுவோருக்கு கண்ணாடி அல்லது லென்ஸ்கள் இலவசமாக வழங்கப்படும். நடப்பாண்டு ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை நடத்தப்படும்.

உபகரணங்கள்

அனைத்து மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில், நிரந்தர கண் பார்வை பரிசோதனை மையம் அமைக்கப்படுகிறது. இம்மையங்களில் கண் பரிசோதனைக்கு தேவையான, மருத்துவ உபகரணங்கள் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !