கார்வார் கப்பல் கண்காட்சியை பார்க்க அனுமதி
உத்தரகன்னடா மாவட்டம், கார்வாரின் ரவீந்திரநாத் கடற்கரையில், போர் கப்பல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இது, கர்நாடகாவில் உள்ள ஒரே போர்க்கப்பல் மியூசியமாகும். இங்கு நம் படையில் இடம்பெற்ற பழைய விமானங்கள், கப்பல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணியருக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருக்கும். கடந்த 1998ல் தயாரிக்கப்பட்ட, 'டியூபோலெவ் - 142 எம்' விமானம், போருக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது அதற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விமானமும் அருங்காட்சியகத்தில் உள்ளது. கடந்தாண்டு உதிரி பாகங்களை இணைத்து, விமானம் முழுமையாக தயார் செய்யப்பட்டது. ஆனால், இதை காண சுற்றுலா பயணியருக்கு, அனுமதி அளிக்கப்படவில்லை. மீன் வளத்துறை அமைச்சர் மங்கள் வைத்யா, அனைத்து பிரச்னைகளையும் சரி செய்து, அருங்காட்சியை காண, சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் தினமும் அருங்காட்சியை காண, பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அமைச்சர் மங்கள் வைத்யா கூறியதாவது: கார்வார் கடற்கரையில் இருப்பது, மாநிலத்தின் ஒரே போர்க்கப்பல் அருங்காட்சியகமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணியர், இந்திய கடற்படையின் செயல்பாடு குறித்து, தகவல் தெரிந்து கொள்ளலாம். போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அருகில் இருந்து பார்த்து ரசிக்கலாம். உத்தரகன்னடாவில், சுற்றுலா சூடு பிடித்துள்ளது. கார்வாருக்கு வரும் சுற்றுலா பயணியர் இந்த போர்க்கப்பல் அருங்காட்சியகத்துக்கும் வருகின்றனர். இங்குள்ள போர்க்கப்பல், விமானங்களை ஆர்வத்துடன் பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி செல்வது?
உத்தரன்னடாவின், கார்வாரில் இருந்து 1 கி.மீ., தொலைவில், போர்க்கப்பல் அருங்காட்சியகம் உள்ளது. பெங்களூரில் இருந்து, 526 கி.மீ., மங்களூரில் இருந்து 267 கி.மீ., தொலைவில் கார்வார் உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், கார்வாருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. கார்வாரில் இறங்கி, அங்கிருந்து, வாடகை வாகனத்தில் அருங்காட்சியகத்துக்கு செல்லலாம். பார்வை நேரம்: காலை 9:30 மணி முதல், மதியம் 12:30 மணி வரை. மதியம் 2:00 மணி முதல் 5:00 மணி வரை. அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: நரசிம்மர் கோவில், தில்மதி கடற்கரை, அக்வேரியம், காளி ஆற்றுப்பாலம்.