143 ஆயுஷ் மான் மையங்களுக்கு சொந்த கட்டடம் கட்ட திட்டம்
மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டத்தில், வாடகை கட்டடங்களில் இயங்கி வரும், 143 'ஆயுஷ்மான் ஆரோக்கிய' மையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தற்போது மாவட்டத்தில் மொத்தம், 414 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில், 271 மையங்களுக்கு ஏற்கனவே சொந்தக் கட்டடங்கள் உள்ளன. மீதமுள்ளவை வாடகை இடங்களிலோ அல்லது இதர அரசு கட்டடங்களிலோ தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களுக்கு சொந்தமாக கட்டடம் கட்ட, 15வது நிதிக்குழுவின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையமும் தலா, 7 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். புதிய கட்டடங்களில் பரிசோதனை கூடம், யோகா பயிற்சி செய்வதற்கான இடம், மருந்தகம் உட்பட நவீன வசதிகள் பல இருக்கும். ஏற்கனவே பல இடங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களுக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட சுகாதார துறையின் தரவுகளின்படி, இந்த புதிய கட்டடங்கள் அமைப்பதன் மூலம் தாய் - சேய் நலன், தொற்று அல்லாத நோய்களுக்கான பரிசோதனை மற்றும் பொதுவான மருத்துவ ஆலோசனைகள் வழங்குவதில், அதிக முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.