உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஓட்டுத்திருட்டை எதிர்த்து 1.12 கோடி கையெழுத்து: 10ல் கட்சி மேலிடத்திடம் ஒப்படைக்க திட்டம்

ஓட்டுத்திருட்டை எதிர்த்து 1.12 கோடி கையெழுத்து: 10ல் கட்சி மேலிடத்திடம் ஒப்படைக்க திட்டம்

பெங்களூரு: ''பா.ஜ., தொடர்ந்து ஓட்டுகளைத் திருடி வருகிறது. இதை எதிர்த்து நடந்த கையெழுத்து பிரசாரத்தில், இதுவரை 1.12 கோடி பேரின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கட்சி மேலிடத்துக்கு 10ல் அனுப்பி வைக்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள இந்திரா பவனில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி: பா.ஜ.,வினர் பொய் செல்வதில் மட்டுமல்ல, ஓட்டுத் திருடுவதிலும் வல்லமை கொண்டவர்கள். இதை எதிர்த்து நடந்த கையெழுத்து பிரசாரத்தில், இதுவரை 1.12 கோடி பேரின் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கட்சி மேலிடத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மூலம் நவ., 10ல் அனுப்பி வைக்கப்படும். நவ., 25ல் புதுடில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஊர்வலம் நடக்க உள்ளது. இன்னும் மூன்று, நான்கு நாட்களுக்கு, விடுபட்ட இடங்களில் கையெழுத்து பிரசாரம் தொடரும். ஓட்டுச்சாவடி வாரியாக, கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஓட்டுத் திருட்டு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு, துணை ஆவணங்களை வழங்க, நாங்கள் தகவல்களை கேட்டால், ஆணையமே எங்களிடம் ஆதாரங்களை கேட்கிறது. எனவே, நகராட்சி தேர்தலை, ஓட்டுச்சீட்டு மூலம் நடத்துவது குறித்து பரிசீலித்து உள்ளோம். இந்த கையெழுத்து பிரசாரத்தை வெற்றிகரமாக நடத்திய முதல் மாநிலம் கர்நாடகா தான். இந்த வெற்றிக்கு இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்களே காரணம். மோடி பிரதமரான பின், அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களின் மதிப்பை குறைக்க துவங்கி உள்ளார். இதற்கு தேர்தல் ஆணையத்தையும், சி.பி.ஐ.,யையும் கைப்பாவையாக மாற்றி உள்ளார். ஓட்டுத் திருட்டை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஜனநாயகம், அரசியலமைப்பின் மதிப்பை பாதுகாக்க போராட்ட பாதையில் செல்வோம். பல சட்டசபை, லோக்சபா தேர்தலில், ஓட்டுத் திருட்டு மூலம் பா.ஜ., ஆட்சிக்கு வந்தது தெளிவாகிறது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தொடர்ச்சியான ஆய்வு, விசாரணைக்கு பின் ஓட்டுத் திருட்டு நடந்தது குறித்து நாட்டு மக்களை நம்ப வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை