உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காம்பவுண்ட் சுவற்றில் கண்ணாடி சிறுநீர் கழிப்பதை தடுக்க திட்டம்

 காம்பவுண்ட் சுவற்றில் கண்ணாடி சிறுநீர் கழிப்பதை தடுக்க திட்டம்

மைசூரு: இம்முறை துாய்மை ஆய்வில், அதிக மதிப்பெண்களை பெற்று, 'நம்பர் ஒன்' இடத்தை பிடிக்க முயற்சிக்கும் மைசூரு மாநகராட்சி, நகரின் துாய்மையை காப்பாற்ற சிறப்பு திட்டத்தை பயன்படுத்தியுள்ளது. இது குறித்து மைசூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: துாய்மையில் முதல் இடத்தில் இருந்த மைசூரு, சில ஆண்டுகளாக பின் தங்கியுள்ளது. இம்முறை துாய்மை ஆய்வில் அதிக மதிப்பெண் பெற, மைசூரு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக சிறப்பு திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளது. பொதுவாக பஸ் நிலையத்துக்கு வரும் பயணியர், பொது மக்கள், வழிப்போக்கர்கள், நடைபாதையிலேயே சிறுநீர் கழித்து அசுத்தமாக்குகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழலும் பாழாகிறது. பஸ்களில் பயணிக்கும் மற்ற பயணியர், குறிப்பாக பெண்கள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மைசூரு ரூரல் பஸ் நிலையம் எதிரே, சாக்கடையை ஒட்டியுள்ள காம்பவுண்ட் சுவறிலும், அரசு விருந்தினர் இல்லத்தை ஒட்டியுள்ள காம்பவுண்ட் சுவற்றிலும் கண்ணாடி ஒட்டப்பட்டுள்ளது. இதனால் யாராவது அங்கு நின்று சிறுநீர் கழித்தால், அதை அந்நபரே பார்த்ததாக இருக்கும். அது மட்டுமின்றி அப்பகுதியில் நடமாடும் பொது மக்களுக்கும் தென்படும். இது சிறுநீர் கழிக்கும் நபருக்கு, தர்ம சங்கடம் ஏற்படும். கண்ணாடியை பார்த்தவுடன், அங்கு சிறுநீர் கழிக்க தயங்குவர். கண்ணாடியின் கீழே எல்.இ.டி., பல்ப் பொருத்தியுள்ளதால், இரவு நேரத்திலும் இங்கு சிறுநீர் கழிப்பதை தவிர்க்கலாம். தற்போது சோதனை முறையில், இரண்டு இடங்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. திட்டம் வெற்றி அடைந்தால், மைசூரு நகரின் மற்ற இடங்களிலும் திட்டம் விஸ்தரிக்கப்படும். திட்டத்தை பொது மக்களும் பாராட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !