நக்சல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க திட்டம்
ஷிவமொக்கா: நக்சல் செயல்பாடுகளில் இருந்து விலகியுள்ள, முன்னாள் நக்சல்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில், ஷிவமொக்காவில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து, மாநில அரசு ஆலோசிக்கிறது. நடப்பாண்டு ஜனவரி மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில், நக்சல்கள் மீது 50 முதல் 70 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயுத தடை சட்டம், கொலை உட்பட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க மங்களூரு, உடுப்பி, பெங்களூரு, ஷிவமொக்கா நகரில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து, பெங்களூரின் விதான் சவுதாவில் தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமையில், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது. நக்சல்கள் வழக்குகளை விசாரிப்பதற்காக, சிறப்பு நீதிமன்றம் அமைக்க அனுமதி கேட்டு, இதற்கு முன்பு கர்நாடக ஐகோர்ட்டில் அரசு வேண்டுகோள் விடுத்தது. அப்போது ஐகோர்ட்டில் தற்காலிக தலைமை நீதிபதி இருந்ததால், அனுமதி கிடைக்கவில்லை. இப்போது நிரந்தர தலைமை நீதிபதி இருப்பதால், மீண்டும் கோரிக்கை விடுக்க அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரில் ஏற்கனவே, சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இங்கு வேறொரு சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடியாது. உடுப்பி, மங்களூரில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க, சில தொழில்நுட்ப பிரச்னைகள் உள்ளன. எனவே ஷிவமொக்காவில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து அரசு ஆலோசிக்கிறது. சரண் அடைந்துள்ள முன்னாள் நக்சல்களின் வழக்குகள், ஒரே நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும் என, கூறப்படுகிறது. இதுகுறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஷிவமொக்கா நகரில், சிறப்பு நீதிமன்றம் அமைக்க தயாராகி வருகிறோம். இங்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். புதிய நீதிமன்றத்தில் ஒரு ஹால், முன்னாள் நக்சல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒதுக்கப்படும். ஆயுதங்களை கீழே போட்டு, சரண் அடைந்துள்ள முன்னாள் நக்சல்களின் வழக்குகள், இந்த ஹாலில் நடக்கும். சிறப்பு நீதிமன்றம் அமைப்பதால், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வசதியாக இருக்கும். முன்னாள் நக்சல்களுக்கு, சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, 60 லட்சம் ரூபாய் வழங்கும்படி, சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம், அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உடனடியாக நிதியை வழங்கும்படி, தலைமை செயலர் ஷாலினி ரஜ்னீஷ் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.