பார்க்கிங் பகுதியான விளையாட்டு மைதானம் பயிற்சி செய்வது எங்கே என வீரர்கள் கேள்வி
விளையாட்டு வீரர்களுக்கு பயன்பட வேண்டிய, ஆனேக்கல் ஏ.எஸ்.பி., மைதானம், இப்போது வாகன பார்க்கிங்காக மாறி உள்ளது. 'நாங்கள் எங்கு பயிற்சி செய்வது' என, விளையாட்டு வீரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவில் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம் ஏ.எஸ்.பி., உயர் நிலைப்பள்ளி, கல்லுாரி, கர்நாடக பப்ளிக் பள்ளி மற்றும் புதிதாக துவக்கப்பட்ட தொடக்க பள்ளி மாணவர்கள் விளையாட்டு பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள், இங்கு வந்து பயிற்சி பெறுகின்றனர். தினமும் காலை, மாலையில் ஓட்ட பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சி பெற, மைதானத்துக்கு வருகின்றனர். ஆனால் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் நிம்மதியாக பயிற்சி பெற முடிவதில்லை. மைதானத்தை சுற்றிலும் கார்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். தாலுகா பஞ்சாயத்து, நீதிமன்றம், பொதுப்பணித் துறைகளின் பணிக்கு வரும் பலரும், இம்மைதானத்தில் தான் வாகனங்களை நிறுத்துகின்றனர். விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் விளையாட்டு பயிற்சிக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது. இங்கு வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, மன்றாடினாலும் பொருட்படுத்துவது இல்லை. அது மட்டுமின்றி, மைதானத்தை துாய்மையாக பராமரிப்பதும் இல்லை. அடர்த்தியான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பாம்புகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. விளையாட்டு பயிற்சி பெற இளைஞர்கள், மாணவர்கள் இங்கு வரவே தயங்கும் சூழ்நிலை உள்ளது. விளையாட்டு மைதானம், பொது கழிப்பறையாக மாறியுள்ளது. பலரும் சிறுநீர் கழிக்க இம்மைதானத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மைதானத்தின் சுற்றுச்சூழல் பாதித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலருக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ளது. தங்களின் திறமையை வளர்த்து கொள்ள, இம்மைதானத்தை நம்பியுள்ளனர். ஆனால், அதற்கு தகுந்த சூழ்நிலை அங்கில்லை. நாங்கள் எங்கு பயிற்சி பெறுவது என, கேள்வி எழுப்புகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீரர்கள் கூறியதாவது: ஆனேக்கல் தாலுகா விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை முதல் மாலை வரை, விளையாட்டு பயிற்சிகள் நடக்கின்றன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இம்மைதானத்தில் பயிற்சி பெறுகின்றனர். தாலுகா அளவிலான விளையாட்டு போட்டிகள் இங்கு நடக்கின்றன. ஆனால் மைதானத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. மைதான வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும். விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த வேண்டும். விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யவும், பயிற்சி பெறவும் தகுந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். நாங்கள் பயிற்சி பெற, தேவையான வசதிகளை செய்து தாருங்கள். துாய்மையாக பராமரிக்க வேண்டும். மைதானத்தின் அவல நிலையால், பலரும் விளையாட்டு பயிற்சியை விட்டு விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் - .