அமைதியாக பண்டிகை கொண்டாட போலீஸ் கமிஷனர் வலியுறுத்தல்
பெங்களூரு: ''விநாயகர் சதுர்த்தி மற்றும் மிலாது நபி பண்டிகைகள் வருவதால், பெங்களூரு முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொது மக்கள் அமைதியான முறையில் பண்டிகை கொண்டாட வேண்டும்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தெரிவித்தார். பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன், கமிஷனர் சீமந்த் குமார் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், அவர் பேசியதாவது: பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலம், சிலை கரைப்பின் போது, எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். சிறிய அசம்பாவிதங்களும் நடக்காமல், பார்த்துக்கொள்ள வேண்டும். ஏதாவது சிறு சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், உடனடியாக அங்கு செல்ல வேண்டும். விநாயகர் சிலைகள் வைக்கும் இடங்களின் அருகில், போலீசாரை நியமியுங்கள். நகர கமிஷனருடன் தொடர்பில் இருங்கள். பதற்றமான இடங்களில், தீயணைப்பு வாகனங்களுடன், ஊழியர்களை நியமியுங்கள். அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள். அதே போன்று, மிலாது நபி பண்டிகை நேரத்திலும், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். எந்த கலவரங்களும் நடக்க கூடாது. பிரச்னைகள் தென்பட்டால், ஆரம்பத்திலேயே சரி செய்யுங்கள். பொது மக்களும், அமைதியான முறையில் பண்டிகை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.