ஆட்டோவில் போடப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைத்த போலீசார்
பேட்ராயனபுரா:கள்ளக்காதலில் பிறந்த குழந்தையின் உதடு பிளவு காரணமாக, ஆட்டோவில் விட்டு சென்ற பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து போலீசார் எச்சரித்தனர். கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு பேட்ராயனபுரா பகுதியில், ஏப்., 24ம் தேதி அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்தனர். ஆட்டோவில், உதடு பிளவுடன் பிறந்து, சில நாட்களே ஆன பெண் குழந்தை காணப்பட்டது.அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், பேட்ராயனபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையை துவக்கிய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். குழந்தையை ஒரு தம்பதி ஆட்டோவில் வைப்பது தெரியவந்தது.கேமராவில் பதிவான படத்தை வைத்து, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மூலம், அவர்கள் விராஜ்பேட்டை சென்றது தெரியவந்தது.விராஜ்பேட்டை சென்ற போலீசார், அங்குள்ள போலீசார் உதவியுடன் அப்பண்ணா, 30, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தனர். தான் வசிக்கும் பகுதியில், கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உதடு பிளவுடன் இருந்ததால், வளர்க்க விருப்பமில்லை. எனவே, குழந்தையை ஆட்டோவில் விட்டு சென்றதை ஒப்புக்கொண்டார்.அவரை போலீசார் கைது செய்தனர். பெண்ணை அழைத்து, குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.