| ADDED : நவ 19, 2025 08:19 AM
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசாக இருக்கும் வீடியோ வெளியானது தொடர்பாக நடிகர் தர்ஷன் ஆதரவாளரான நடிகர் தன்வீர் கவுடாவிடம் மீண்டும் விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசாக இருக்கும் வீடியோ, 7ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.சி.பி., - பரப்பன அக்ரஹாரா போலீசார் விசாரிக்கின்றனர். கைதிகளின் வீடியோவை, சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ஆதரவாளரான நடிகர் தன்வீர் கவுடா, தன் மொபைல் போனில் எடுத்து வெளியிட்டு இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் இரு முறை விசாரித்தனர். அவரது மொபைல் போனை வாங்கி, தடயவியல் சோதனைக்கு அனுப்பிய போதும், சிறையில் வீடியோ எடுத்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீடியோ எடுத்த மொபைலுக்கு பதிலாக, வேறு மொபைலை தன்வீர் கவுடா கொடுத்திருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரிடம் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.