பெங்களூரில் பெண் கொள்ளையர் பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
பெங்களூரு: 'பெங்களூரில் பெண் கொள்ளையர் அட்டகாசம் துவங்கியுள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக, போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பெங்களூரில் பெண்கள் மட்டுமே இடம் பெற்ற கொள்ளை கும்பல் நுழைந்துள்ளது. நான்கைந்து பேராக சேர்ந்து அபார்ட்மென்ட்களில் நுழைந்து, அங்கு வசிப்போரின் கவனத்தை திசை திருப்பி, விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் செல்கின்றனர். சமீபத்தில் யஷ்வந்த்பூரின் கோல்டன் அபார்ட்மென்ட்டுக்கு, ஆறு பெண்கள் சென்றனர். அபார்ட்மென்டுக்குள் நுழைய முயற்சித்தனர். அதை கவனித்த அபார்ட்மென்ட் செக்யூரிட்டி, பெண்களை உள்ளே விடாமல் தடுத்தார். அப்போது, நான்கு பெண்கள் செக்யூரிட்டியிடம் பேசியபடி, அவரது கவனத்தை திசை திருப்பினர். மற்ற இரண்டு பெண்கள், அபார்ட்மென்டுக்குள் புகுந்தனர். தரை தளத்தில் இருந்த செக்யூரிட்டியின் வீட்டில் நுழைந்து, 40,000 ரூபாயையும், தங்க நகைகளை திருடிக்கொண்டு வெளியே வந்து, கூட்டாளி பெண்களுடன் தப்பியோடினர். இந்த பெண்கள் கவரிங் நகைகளை விற்பது போன்று, அபார்ட்மென்டுக்குள் நுழைகின்றனர். எனவே, புது விதமான இந்த கொள்ளை கும்பலிடம், பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகம் இல்லாத பெண்கள் வந்தால், அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.