பள்ளி, கல்லுாரி திறப்பு தள்ளிவைப்பு?
பெங்களூரு : கடந்த 2020, 2021ல், கொரோனா தொற்று மக்களை பாடாய்படுத்தியது. இதை கட்டுப்படுத்த அரசு போராடியது. மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்ததால், மக்கள் அவதிப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் பற்றாக்குறை, படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுகாதாரத் துறை திணறியது.மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கையால், கொரோனா கட்டுக்குள் வந்தது. மக்களின் வாழ்க்கையும், இயல்பு நிலைக்கு திரும்பி நிம்மதி அடைந்தனர்.இந்நிலையில் கேரளா, மஹாராஷ்டிராவில் பரவிய கொரோனா, கர்நாடகாவிலும் கால் பதித்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் நோயாளிகள் எண்ணிக்கை, தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. முதியவர் ஒருவர் உயிரிழந்தார். எனவே, சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கவனமாக இருக்கும்படி, மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.கோடை விடுமுறை முடிந்து, இம்மாதம் 29ம் தேதி பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படவுள்ளன. தற்போது, சில இடங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வகுப்புகள் துவங்கும் நாளன்றே, மாணவர்களுக்கு சீருடை, பாட புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஆனால், கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், பள்ளி, கல்லுாரிகள் திறப்பதை ஒரு வாரம் தள்ளிவைக்க, மாநில அரசு ஆலோசிக்கிறது.இது குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கிடையே பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இன்னும் மூன்று நாட்கள் சூழ்நிலையை கண்காணிப்போம். ஒருவேளை தொற்று அதிகரித்தால், பள்ளி, கல்லுாரிகள் திறப்பதை தள்ளிவைப்பது பற்றி அரசு ஆலோசிக்கும்.புதிய வகை கொரோனா அவ்வளவாக அபாயமானது இல்லை. இத்தகைய சூழ்நிலையில், பள்ளி, கல்லுாரிகளை திறந்தால் தொற்று தீவிரமடையும் என்ற அச்சமும் உள்ளது. எனவே அனைத்தையும் ஆலோசித்து, முடிவு செய்வோம்.இவ்வாறு கூறினார்.