உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கைதிகளுக்கு போதை பொருள் விநியோகித்த சிறை வார்டன் கைது

கைதிகளுக்கு போதை பொருள் விநியோகித்த சிறை வார்டன் கைது

பெங்களூரு: கைதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த சிறை வார்டன் கைது செய்யப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, ராஜபோக மரியாதையுடன் நடிகர் தர்ஷன் நடத்தப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. அப்போது பணியில் இருந்த சிறை அதிகாரிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தனர். இதைத் தொடர்ந்தும், சிறையில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த காலப்பா அபச்சி என்பவரை போலீசார் 8ம் தேதி கைது செய்தது, தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வார்டன் காலப்பா அபச்சி, ராணுவத்தில் பணியாற்றியவர். 2018ல் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின், தார்வாட் சிறையில் வார்டன் பணிக்கு சேர்ந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் உள்ள இரண்டாவது சோதனை சாவடியில் 8ம் தேதி காலப்பா அபச்சியை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் இருந்து புகையிலைப் பொருட்கள், 100 கிராம் கஞ்சா எண்ணெய் ஆகியவை இருப்பது தெரிந்தது. போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காலப்பா அபச்சி மீது கர்நாடக சிறைச்சாலைகள் சட்டம், பிரிவு 42ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். விசாரணையில், கைதிகளுக்கு காலப்பா அபச்சி போதைப் பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது. தற்போது, பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை யாருக்கு கொடுக்க எடுத்துச் சென்றார் என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி