பந்த ் திற்கு ஆதரவு இல்லை தனியார் பள்ளிகள் அறிவிப்பு
பெங்களூரு: இன்று நடக்கவிருக்கும் கர்நாடக பந்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், பந்திற்கு அமைதியான முறையில் ஆதரவு அளிப்பதாகவும், கர்நாடக மாநில தனியார் பள்ளி மேலண்மை சங்கம் அறிவித்து உள்ளது. பெங்களூரில் நேற்று சங்க பொது செயலர் சசிகுமார் அளித்த பேட்டி: ஏற்கனவே பல கல்வி நாட்கள் இழக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையால், அரசு உதவி பெறும் பள்ளிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எஸ்.ஐ.ஆர்., பணிகள் நீட்டிப்பால், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் செயல்முறை மேலும் பாதிக்கிறது. மாணவர்களின் நலனுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பொருத்தமற்றது. மாநிலத்தில் உள்ள தனியார் துவக்கம், இடைநிலை பள்ளிகள் இன்று வழக்கம் போல செயல்படும். இந்த பந்த்திற்கு ஆதரவாக, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக பிரதிநிதிகள் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அல்லது கருப்பு ரிப்பன்களை அணிந்து பணியாற்றுவர். பள்ளியை மூடுவதற்கு பதில், இந்த சந்தர்ப்பத்தில் மாணவர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கல்வி வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள, சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காவிரி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரசியல் சார்பின்றி, அமைதியாகவும், சமநிலையுடனும் நடத்தப்படும். மாணவர்கள் எந்தவொரு போராட்டங்களிலோ அல்லது நடவடிக்கைகளிலோ பங்கேற்க கட்டாயப்படுத்தபட மாட்டார்கள். இருப்பினும், பந்தின் போது நிலவும் உள்ளூர் சூழல், பாதுகாப்பை கருதி, பள்ளிகள் தங்கள் விருப்பப்படி விடுமுறை அளிக்க முடிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.